மாதவரம் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட 15 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக - வழக்கறிஞர் எஸ்.சுதர்சனம்
திமுக வேட்பாளராக 3-வது முறையாக களம் காண்கிறார் எஸ்.சுதர்சனம். தொகுதி மக்களால் எளிதில் அணுகக்கூடியவர் என பெயர் எடுத்தவர்.
வெற்றி பெற்றவுடன், மெட்ரோ ரயில் விரிவாக்கம், குடிநீர், பாதாளச் சாக்கடை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சித்த மருத்துவப் பல்கலைக்கழகம், பூங்காக்கள், ஏரிக்கரை நடைபாதைகள் அமைக்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கி வாக்கு சேகரித்து வருகிறார்.
அதிமுக - மாதவரம் எஸ்.மூர்த்தி
அதிமுக வேட்பாளரான மாதவரம் எஸ்.மூர்த்தி, ஏற்கெனவே அமைச்சராகப் பதவி வகித்தவர். அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
தொகுதியில் சாலைகள், கழிவுநீர் கால்வாய், குடிநீர் என பல பிரச்சினைகள் உள்ளன. அனைத்தையும் மாற்றிக் காட்டுகிறேன்’ என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - கிருத்திகா
நாதக சார்பில் போட்டியிடும் கிருத்திகா, வீடு, வீடாகச் சென்று, பெண் வாக்காளர்களிடம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை எடுத்துக் கூறி, ‘இலவசங்களே வேண்டாம், தரமான கல்வியும், வேலைவாய்ப்பும் தான் முக்கியம்’ எனக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - வழக்கறிஞர் எம்.எல்.விஜய் பிரபு
தவெக வேட்பாளரான வழக்கறிஞர் எம்.எல்.விஜய் பிரபு, திமுக, அதிமுக என இருகட்சிகளையும் குறை கூறி பிரச்சாரம் செய்வதோடு, ‘என்னை வெற்றி பெறச்செய்தால் மாதவரத்தை மாற்றிக்காட்டுகிறேன்’ என்று உறுதிகூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்துள்ள நிலையில் மாதவரம் தொகுதியில் வெற்றி மாலை யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.