சென்னையின் முக்கிய பகுதிகளான பாரிமுனை, பூக்கடை, உயர் நீதிமன்றம் உள்ளிட்டவை அடங்கிய துறைமுகம் தொகுதியில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் உள்பட மொத்தம் 23 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
கடந்த முறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக உள்ள பி.கே.சேகர்பாபு, இந்த முறையும் திமுக சார்பில் போட்டியிடுகிறார். தேர்தல் அறிக்கையை விளக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், துறைமுகம் தொகுதியில் சாலையோரம் வசித்த 1,400 பேருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் தொடர தன்னை வெற்றிபெறச் செய்யும்படி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதிமுக - ராயபுரம் மனோ
அதிமுக சார்பில் மனோகர் என்ற ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். மக்களிடம் நன்கு அறிமுகமானவர். திமுக அரசு இத்தொகுதியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ‘நான் வெற்றி பெற்றால், இந்த தொகுதியை முன்னோடி தொகுதியாக மாற்றுவேன்.
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே வீடுகள் கட்டித் தர ஏற்பாடு செய்வேன்’ என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
நாம் தமிழர் கட்சி - பாசன் செரிப்
நாதக வேட்பாளரான பாசன் செரிப், ‘கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகியவற்றை இலவசமாக கொடுத்தாலே மக்களின் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரம் செய்து வருகிறோம்.
கடந்த ஆட்சியாளர்களை நம்பி ஏமாந்த மக்கள் கண்டிப்பாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பார்கள்’ எனக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் - சினோரா அசோக்
தவெக சார்பில் போட்டியிடும் சினோரா அசோக், பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் என்பன உள்ளிட்ட தவெகவின் தேர்தல் அறிக்கைகளை விளக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
‘மக்கள் எங்களை நம்புகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’ எனக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க வேட்பாளர்களின் பிரச்சாரமும் வேகமெடுத்துள்ளது. துறைமுகம் யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.