வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள குடியாத்தம் தேசிய உணர்வை தாங்கி நிற்கும் தொகுதியாக உள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசியக் கொடியை நெய்து கொடுத்தது குடியாத்தம் இந்துஸ்தான் பேப்ரிக்ஸ் என்ற கம்பெனி.
இந்த கம்பெனியில் இருந்து தயாரித்து அனுப்பப்பட்ட பல்லாயிரக் கணக்கான தேசிய கொடிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்றப்பட்டன. விவசாயம், தீப்பெட்டி, கைத்தறி லுங்கி நெசவு, பீடி தொழில், டேனரி தொழில்கள் தொகுதியின் தொழில் அடையாளங்கள்.
கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட மோர்தானா அணையும், புகழ்பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் இந்த தொகுதி யின் அடையாளங்களாக உள்ளன. குடியாத்தம் (தனி) தொகுதி யில் பட்டியலினத்தவர்கள், வன்னியர்கள், முதலியார்கள், சிறுபான்மையின மக்கள், நாயுடு சமூகத்தினர் தேர்தல் களத்தில் வெற்றி,தோல்வியை தீர்மானிப் பவர்களாக உள்ளனர்.
சென்னை மாநிலத்தில் ஒரு தொகுதியாக கடந்த 1951 முதல் குடியாத்தம் தொகுதி தேர்தலை சந்தித்து வருகிறது. கைத்தறி, பீடி, விவசாய கூலிகள் என தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி என்பதால் கம்யூ., கட்சிகளின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 1951 மற்றும் 1957 என 2 தேர்தல்களில் பொது உறுப்பினர், பட்டியலின உறுப்பினர் என இரட்டை உறுப் பினரை தேர்வு செய்யும் தொகுதி யாக இருந்துள்ளது.
இந்த தொகுதி 2 இடைத்தேர்தல் உட்பட மொத்தம் 18 தேர்தல்களை சந்தித்ததில் காங்கிரஸ் கட்சி 6 முறையும், மார்க்சிஸ்ட் 7 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளன. 2008-ல் தொகுதி மறு சீரமைப்பில் அருகில் இருந்த பேரணாம்பட்டு (தனி) தொகுதி நீக்கப்பட்டு குடியாத்தம் (தனி) தொகுதியாக உருவாக்கப்பட்டது.
2011 முதல் குடியாத்தம் (தனி) தொகுதி அடையாளத்துடன் தேர்தலை சந்தித்து வருகிறது. தொகுதியில் உள்ள சிறுபான் மையினர் வாக்குகள் திமுகவுக்கு பக்கபலமாக இருக்கும் என்ற தைரியத்தில் திமுகவினர், தேமுதிக வேட்பாளருக்காக களப் பணியாற்றி வருகின்றனர். அதிமுகவில் கடந்த 2021 தேர்தலில் போட்டியிட்டு வாய்ப்பை இழந்த பரிதா புருஷோத்தமன், 2026 தேர்தலில் மீண்டும் கள மிறங்கியுள்ளார்.
கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கடந்த 5 ஆண்டுகளில் கட்சி நிகழ்ச்சிகளிலும், பொது நிகழ்ச்சி களிலும் பங்கேற்று வந்தார். மீண்டும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதால் இந்தமுறை எப்படியும் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கையுடன் பரிதா தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
இவர்களுடன், ஓய்பெற்ற ஆசிரியரான இமலன் நாம் தமிழர் கட்சி வேட்பாளராகவும், தவெக வின் வேட்பாளராக டியூஷன் சென்டர் நடத்தி வரும் சிந்து உட்பட மொத்தம் 11 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியை பொறுத்தவரை குடியாத்தம் நகரப் பகுதி மக்களின் வாக்குகள்தான் அதிமுக அல்லது தேமுதிக வேட்பாளரா? என்பதை தீர்மானிக்கும்.
நீண்ட நாள் கோரிக்கை
* பேரணாம்பட்டில் நிலவும் குடிநீர் பிரச்சினை.
* பேரணாம்பட்டு ஏரியில் தேங்கும் கழிவுநீருக்கு தீர்வு காண வேண்டும்.
* பேரணாம்பட்டில் தோல் மற்றும் வஜ்ஜிரம் தொழிற்சாலை கழிவு களால் ஏற்படும் நிலத்தடி நீராதார பாதிப்பை தடுக்க வேண்டும்.
* பத்தலப்பல்லி ஆற்றில் ஆளும் கட்சியினரின் மணல் கொள் ளைக்கு தீர்வு காண வேண்டும்.
* பேரணாம்பட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்துக்கான இடத்தில் கட்டப்பட்ட உழவர் சந்தையை முழு அளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
* பேரணாம்பட்டு மருத்துவ மனையில் கூடுதல் மருத்து வர்களை நியமிக்க வேண்டும்.
* குடியாத்தத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிப்பதுடன், தீக்காயத் துக்கான சிறப்பு சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும்.
* பத்தலப்பல்லி அணை கட்டுமான திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
* குடியாத்தம் காய்கறி சந்தையில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய வணிக வளாகம் கட்ட வேண்டும்.
* கைத்தறி நூல் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
* பேரணாம்பட்டு நகரில் போக்கு வரத்து காவல் நிலையம் தொடங்க வேண்டும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,22,345
பெண் - 1,29,209
மூன்றாம் பாலினத்தவர் - 34
மொத்த வாக்காளர்கள் - 2,51,588