சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்கு சேகரித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
மாநிலமே உற்றுநோக்கும் விஐபி தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் 2-வது முறையாக வெற்றிக்கனியைப் பறிக்கத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
இத்தொகுதியில், திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின்,அதிமுக சார்பில் ஆதிராஜாராம், தவெக சார்பில் செல்வம், நாதக சார்பில் ஆயிஷா பேகம், பகுஜன் சமாஜ் சார்பில் முகமது யாசர், தவாக சார்பில் இர்பான் பாஷா மற்றும் 20 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக - வளர்ச்சிப் பாதையில் சேப்பாக்கம்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “சேப்பாக்கம் இன்று வளர்ச்சிப் பாதையில் உள்ளது. இந்த மக்கள் நலப்பணிகள் இன்னும் வீரியமாகத் தொடர உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என, உருக்கமாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்.
அதிமுக - அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மீட்கப் பாடுபடுவேன்
அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம், “மக்களுடன் தொடர்பில் இல்லாத ‘விஐபி கலாச்சாரத்தை’ ஒழித்து, தொகுதி மக்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கக் கூடிய எளிய பிரதி நிதியாக நான் இருப்பேன்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம்.
அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கப் பாடுபடுவேன்” என உறுதியளித்து, அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
நாதக - ஊழல் மற்றும் லஞ்சமற்ற நிர்வாகம்
நாதக வேட்பாளர் ஆயிஷா பேகம், “மாற்றம் என்பது சொல் அல்ல செயல்” என்கிற தாரக மந்திரத்துடன், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வருகிறார்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்கு சேகரித்த நாதக வேட்பாளர் ஆயிஷா பேகம்.
“ஊழல் மற்றும் லஞ்சமற்ற நிர்வாகத்தை இத்தொகுதியில் முன்னெடுப்பதே எனது முதல் குறிக்கோள். அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வேன்” என அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக-மக்களின் கோட்டையாக மாறும்
தவெக வேட்பாளர் செல்வம், “சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி இனி ஒரு குடும்பத்தின் கோட்டையாக இருக்காது. அது மக்களின் கோட்டையாக மாறும்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர் செல்வம்.
பெண்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதோடு, இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப் புழக்கத்தைத் தொகுதியிலிருந்து வேரோடு ஒழிக்கக் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்” என கூறி, வாக்கு சேகரித்து வருகிறார்.