புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி நகராட்சி மற்றும் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய 3 ஒன்றியங்களையும் உள்ளடக்கியது அறந்தாங்கி தொகுதி. முக்குலத்தோர், பட்டியலினத்தவர்கள், முஸ்லிம்கள், முத்தரையர்கள் கணிசமாக உள்ளனர்.
இதுவரை அதிமுக 7, திமுக 4, எம்ஜிஆர் அதிமுக, காங்கிரஸ் தலா 2, தாயக மறுமலர்ச்சி கழகம், சுயேச்சை தலா 1 முறை வெற்றி பெற்றுள்ளனர். அதில், திருநாவுக்கரசர், இவரது கட்சி வேட்பாளர், மகன் ஆகியோர் 9 முறையும் மற்ற கட்சியினர் 8 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.டி.ராமச்சந்திரன் 81,835 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் எம்.ராஜநாயகம் 50,942 வாக்குகளும், நாதக ஹுமாயூன் கபீர் 18,460 வாக்குகளும், அமமுக கே.சிவசண்முகம் 4,699 வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் நீண்ட காலம் அரசியல் அனுபவம் கொண்ட திருநாவுக்கரசரின் செல்வாக்கு, திமுக கூட்டணி பலம், கடந்த 5 ஆண்டுகளில் செய்த திட்டங்கள் போன்றவற்றால் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ராமச்சந்திரன் உள்ளார்.
இந்தத் தொகுதி காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டதால் திமுகவினரின் அதிருப்தி வாக்குகள், கூட்டணி பலம், கடந்த தேர்தலில் அமமுக பெற்ற வாக்குகள் போன்றவை தன்னை வெற்றி பெறச் செய்யும் என்ற நம்பிக்கையில் பாஜக வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளார்.
பிரதான மாநில கட்சிகள் போட்டியிடாமல் கூட்டணியில் உள்ள தேசிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாலும், சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் புதுக்கோட்டையில் இருந்து இத்தொகுதியில் போட்டியிடுகிறார் தவெக வேட்பாளர் முகமது பர்வேஸ். அதே நம்பிக்கையில் களத்தில் உள்ளார் நாதக வேட்பாளர் முத்துலட்சுமி. களநிலவரம் காங்கிரஸ்- பாஜக இடையே கடுமையாகவே உள்ளது.
எதிர்பார்ப்புகள்
* கடலோரப் பகுதியில் கடல் உணவுகளை மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கான தொழில் வசதி ஏற்படுத்த வேண்டும்.
* அறந்தாங்கி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
* முத்துக்குடா சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும்.
* அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியில் கூடுதல் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும்.
* ஏரி, கண்மாய்களை தூர்வார வேண்டும்.
* குடிநீர் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்ப்பதற்கு கிராமங்கள் தோறும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
* கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்த வேண்டும். அரசு நவீன அரிசி ஆலை அமைக்க வேண்டும்.
இதுவரை வென்றவர்கள்
1952 முகமது சாலிகு - காங்கிரஸ்
1957 எஸ்.ராமசாமி - சுயேச்சை
1962 ஆ.துரையரசன் - திமுக
1967 ஆ.துரையரசன் - திமுக
1971 எஸ்.ராமநாதன் - திமுக
1977 எஸ்.திருநாவுக்கரசர் - அதிமுக
1980 எஸ்.திருநாவுக்கரசர் - அதிமுக
1984 எஸ்.திருநாவுக்கரசர் - அதிமுக
1989 எஸ்.திருநாவுக்கரசர் - அதிமுக
1991 எஸ்.திருநாவுக்கரசர் - தாமக
1996 எஸ்.திருநாவுக்கரசர் - அதிமுக
2000 அன்பரசன் எம்ஜிஆர் - அதிமுக
2001 ப.அரசன் எம்ஜிஆர் - அதிமுக
2006 உதயம் சண்முகம் - திமுக
2011 எம்.ராஜநாயகம் - அதிமுக
2016 ஏ.ரத்தினசபாபதி - அதிமுக
2021 தி.ராமச்சந்திரன் - காங்கிரஸ்
வாக்காளர்கள் எண்ணிக்கை
ஆண்கள் - 1,13,235
பெண்கள் - 1,16,597
மூன்றாம் பாலினத்தவர் - 2
மொத்தம் - 2,29,834