தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 96-வது இடத்தில் திருச்செங்கோடு தொகுதி உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுவரையில் இத்தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டு குமாரபாளையம் தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதியில் திருச்செங்கோடு நகராட்சி, மல்லசமுத்திரம் பேரூராட்சி உள்ளது.
அர்த்தநாரீஸ்வரர் கோயில், சின்ன ஓங்காளியம்மன் கோயில், புதுப்பாளையம் காந்தி ஆசிரமம், ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் தயாரிப்பு நிறுவனங்கள் தொகுதியின் முக்கிய அடையாளங்களாகும்.
இத்தொகுதியில் கொங்கு வேளாளக்கவுண்டர் பிரிவு மக்கள் கணிசமான அளவில் உள்ளனர். இதற்கு அடுத்த நிலையில் முதலியார், வன்னியர் மற்றும் பட்டியலின சமூக மக்கள் உள்ளனர். விசைத்தறி கூடங்கள், ரிக் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த தொழில்கள், விவசாயம் ஆகியவை பிரதான தொழில்களாகும்.
தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்
திருச்செங்கோடு புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், பரமத்தி சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் நிலவும் வாகனப் போக்குவரத்து நெரிசல் நகர மக்களுக்கு தீராத தலைவலியாக உள்ளது.
தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் பல இடங்களில் சாலை வசதி மேம்படுத்த வேண்டும்.
நகராட்சி போல் கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல் வடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு தனி கல்வி மாவட்டமாக இருந்தது. திருச்செங்கோடு தொகுதியில் ரிக் பிரதான தொழிலாகும். இந்திய அளவில் திருச்செங்கோட்டில் மட்டும் தான் ரிக் வாகனங்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எனினும், ரிக் வாகன தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் பெங்களூரு உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அந்த உதிரி பாகங்கள் திருச்செங்கோட்டில் தயாரிப்பதற்கான ஆலைகள் அமைக்க வேண்டும்.
விசைத்தறி கூடங்கள் கணிசமான அளவில் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளை ஈரோட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தொகுதியில் ஜவுளி விற்பனை சந்தை ஏற்படுத்த வேண்டும்.
விசைத்தறி கூடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கந்து வட்டிப் பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் அரசே கடனுதவி வழங்கலாம். திருமணிமுத்தாறு-காவிரி ஆறு உபரிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன.
கடந்த தேர்தல் நிலவரங்கள்
கடந்த 1952-ம் ஆண்டு முதல் கடந்த 2021-ம் வரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 முறையும், தேமுதிக, கொமதேக ஆகிய கட்சிகள் தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
திருச்செங்கோடு எம்பி தொகுதியாக இருந்த சமயத்தில் இத்தொகுதியில் இருந்து, மறைந்த திமுக பொதுச்செயலாளரான பேராசிரியர் க.அன்பழகன் கடந்த 1967-ம் ஆண்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அதுபோல் முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் 1957, 1962 என இரு முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியாக தேர்வாகினார்.
மண்ணின் மைந்தர்களுக்கு இடையே போட்டி
தொகுதியைப் பொறுத் தவரை திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் கொமதேக பொதுச்செயலாளரான ஈஸ்வரன் 2-வது முறையாக களம் காண்கிறார். மண்ணின் மைந்தர் என்பதுடன் தொகுதியில் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்.
அந்த செல்வாக்குடன் கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சித் திட்டப்பணிகளை முன்னிலைப்படுத்தியும், மீண்டும் வெற்றி பெற்றால் செய்யபோகும் பணிகளை குறிப்பிட்டும் சொந்த மற்றும் கூட்டணிக் கட்சியினரை திரட்டிக் கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுக கூட்டணியில் அதிமுக இத்தொகுதியில் நேரடியாக களம் காண்கிறது. அதிமுக வேட்பாளரான ஆர்.சந்திரசேகர் கட்சியில் திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வருகிறார். தொகுதி மண்ணின் மைந்தரான சந்திரசேகர் கட்சியினர் மத்தியில் பரிட்சயமானவர்.
ஆகையால் சொந்தக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை அரவணைத்தபடி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கட்சியின் கடந்த சாதனைகளை முன்னிலைப்படுத்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளரான முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி கே.ஜி.அருண்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்படும் முன்பிருந்தே தொகுதியில் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் கூடுதல் வேகமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
திமுக, அதிமுகவுக்கு இணையாக தவெக பிரச்சாரத்தில் ஈடுபடுவதால் திருச்செங்கோடு தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது என சொல்லும் அளவிற்கு உள்ளது. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை கட்சியின் இளைஞர் பாசறையில் மாநில பொறுப்பில் உள்ள ரேவதி வேட்பாளராக உள்ளார்.
மண்ணின் மைந்தரான ரேவதி கட்சி தேர்தல் வாக்குறுதிகளை பிரதானப்படுத்தி தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,00,412
பெண் - 1,06,475
மூன்றாம் பாலினத்தவர் - 41
மொத்த வாக்காளர்கள் - 2,06,928