தமிழகம்

சோழவந்தான் தொகுதியில் ஜொலிக்க போவது யார்?

ஆதரவு திரட்டும் திமுக, அதிமுக வேட்பாளர்கள்

என்.சன்னாசி

மதுரை சோழவந்தான் தொகுதியில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி உள்ளது. இரு கட்சி வேட்பாளர்களும் தங்களது அரசின் சாதனைகளை சொல்லி மக்களிடம் ஆதரவு திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

உலகப்புகழ் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெருமை சேர்க்கும் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் வாடிப்பட்டி உள்ளிட்ட விவசாய கிராமங்கள் நிறைந்த பகுதிகளை உள்ளடக்கிய தனித்தொகுதி சோழவந்தான்.

2011-ல் தொகுதி மறுசீரமைப்பின்போது, சமயநல்லூர் என்ற தனித்தொகுதி கலைக்கப்பட்டு அதிலுள்ள சில பகுதிகளை மதுரை கிழக்கு தொகுதியிலும், பல ஊர்கள் தற்போதைய சோழவந்தான் தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் திமுக சார்பில், ஏற்கெனவே வென்ற வெங்கடேசனும், அதிமுகவில் 2016-ல் வெற்றிபெற்ற மாணிக் கமும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவான கருப்பையா தவெகவிலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து நாகலட்சுமி, சசிகலா கட்சி வேட்பாளராக மருத்துவர் பாலமுருகன் மற்றும் சுயேச்சைகள் என 14 பேர் போட்டியிடுகின்றனர்.

இங்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரவர் கட்சியின் பலத்துக்கேற்ப வாக்குகள் பிரியும். சீட் கிடைக்காத விரக்தியில் திடீரென அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளராகியுள்ள கருப்பையா ஏற்கெனவே ஒருமுறை அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தவர். இவர் கணிசமான இளைஞர்களின் ஒட்டுகளை பிரிப்பார்.

திமுக வேட்பாளரான வெங்கடேசன் கடந்தமுறை எம்எல்ஏவாக இருந்ததால் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகள் சிந்தாமல் கிடைக்கும் என நம்புகிறார். அமைச்சர் பி.மூர்த்தியின் ஆதரவு முழுமையாக உள்ளது பெரிய பலம். திமுக அதிருப்தி ஓட்டுகளை அவர் சரிசெய்ய வேண்டிய நிலையும் உள்ளது.

அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வாக்குகள், கடந்த தேர்தலில் தோற்றதால் ஏற்பட்டுள்ள அனுதாபம் உள்ளிட்டவை தனக்கு சாதகமாக இருக்கும் என அதிமுக வேட்பாளர் மாணிக்கம் நம்புகிறார்.

இத்தொகுதியில் ஒரே பெண் வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் நாம் தமிழர் கட்சி நாகலட்சுமி. முதுகலை பட்டதாரியான இவர் உள்ளூரைச் சேர்ந்தவர். டாக்டர் பாலமுருகன் அதிமுக, திமுக என, மாறி மாறி இருந்துவிட்டு, அக்கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காததால் சசிகலா கட்சியில் வேட்பாளராகியுள்ளார்.

திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள், சுயேச்சைகள் என 14 பேர் களத்தில் இருந்தாலும், திமுக, அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் சாதனைகளை சொல்லி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் மாற்றத்தை விரும்புவோர் தவெக, நாம் தமிழர் கட்சிகளுக்கு வாக்களிக்கக்கூடும். இதனால் இவ்விரு கட்சிகளுக்கும் கணிசமான வாக்குகள் பதிவாகும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

திமுகவினர் கூறுகையில், தற்போது சிட்டிங் எம்எல்ஏ இருக்கும் வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு மற்றும் அரசு நிதியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். திமுகவின் திட்டங்களால் தொகுதியில் ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்துள்ளது.

கூடுதல் மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பு போன்ற திமுகவின் வாக்குறுதியாலும் மீண்டும் திமுகவே தொகுதியை கைப்பற்றும், என்றனர். அதிமுகவினர் கூறுகையில், 2016-ல் எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் தொகுதிக்கு பல திட்டங்களை செய்தார்.

தொகுதியில் முதியோர் உதவியை அதிகமாக வாங்கிக் கொடுத்த எம்எல்ஏ என பெயரெடுத்தார். அரசு நிதி தவிர, அவரது சொந்த நிதியிலும் சாலை, குளம் சீரமைப்புப் பணிகளை செய்தார். இதுபோன்ற அவரது செயல்பாடு அவருக்கு கடந்த முறை கைகொடுக்காவிட்டாலும் இம்முறை வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது, என்றனர்.

SCROLL FOR NEXT