தமிழகம்

மதுரை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் யார் கை ஓங்க போகிறது? - நேர்காணலுக்குப் பின் சீட் பெற தீவிரம்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த அதிமுகவினரிடம் நேர்காணல் முடிந்த நிலையில், சீட் பெற மாவட்ட செயலாளர்களின் சிபாரிசை கட்சியினர் நம்பியுள்ளனர். மதுரை அதிமுகவில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளன.

மாநகர் மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ கட்டுப்பாட்டில் மதுரை மேற்கு, தெற்கு, மத்தி மற்றும் வடக்கு தொகுதிகள் உள்ளன. புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றம், மேலூர் மற்றும் கிழக்கு தொகுதிகளும், மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கட்டுப்பாட்டில் திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

இந்த 10 தொகுதிகளுக்கும் விருப்ப மனு கொடுத்திருந்த அதிமுகவினரிடம், 10-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது. பொதுச்செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோர் இருந்தனர்.

விருப்ப மனு கொடுத்தோரிடம் தனித் தனியாக நேர்காணல் நடத்தாமல் ஒட்டு மொத்தமாக ஓர் அறையில் வைத்து நடந்துள்ளது. இதனால் தங்களுடைய பலம், கட்சிக்காக உழைத்த விவரங்கள், வெற்றி வாய்ப்புகளைப் பொதுச் செயலாளரி டம் வெளிப்படையாகக் கூற முடியவில்லை என்ற ஏமாற்றம் சிலரிடம் உள்ளது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறிய தாவது: மதுரை மாநகர், கிழக்கு மாவட்ட தொகுதிகளுக்குட்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தோரை மொத்தமாக வைத்து நேர்காணல் நடத்தினர். அதன்பிறகு ஆர்.பி.உதயகுமார் மாவட்டச் செயலாளராக உள்ள புறநகர் மேற்கு மாவட்டத்தின் 3 தொகுதிகள், தேனி மாவட்டத்தின் 4 தொகுதிகளுக்கும் சேர்த்து நேர்காணல் நடத்தினர்.

பொதுச்செயலாளர் பழனிசாமி பேசும் போது, யாரை வேட்பாளராக அறிவித்தாலும் ஒத்துப்போய் அவர்களுக்காக தேர்தல் பணியாற்ற வேண்டும். பழைய மாதிரி தனித்தனியாக அமர்ந்து நேர்காணல் நடத்துவதற்கு நேரமில்லை என்றார். ‘தேமுதிக கூட்டணிக்கு வந்தால், 3 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கவும், வராவிட்டால் 2 தொகுதி களைக் கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டு, அதிமுக 8 தொகுதிகளிலும் போட்டியிடும் வாய்ப்புள்ளது.

மதுரை கிழக்கில் ‘சீட்’ கேட்போரில் முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் ரமேஷ், வழக்கறிஞர் மாங்குளம் மகேந்திரன் ஆகியோர் முக்கியமானோர். இவர்களில் ராஜன் செல்லப்பா யாரைப் பரிந்துரை செய்கிறாரோ அவர்தான் வேட்பாளராகும் வாய்ப்புள்ளது.

சில தொகுதிகளில் மாவட்ட செயலாளரை விட பலம் படைத்தவர்கள் சிபாரிசு செய்வோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகுதான் மதுரை மாவட்டத்தில் யார் கை ஓங்கப்போகிறது என்பது தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT