நாகர்கோவில் தொகுதியில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரிக்கும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி.
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான, நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்நகருக்கு வராமல் செல்வதில்லை.
நாகராஜா கோயில், மணிமேடை சந்திப்பு, வேப்பமூடு போன்றவை அடையாளங்களாக உள்ளன. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பல வளர்ச்சி திட்டங்களை எதிர்பார்த்து நாகர்கோவில் காத்திருக்கிறது. இங்கு 2,58,928 வாக்காளர்கள் உள்ளனர்.
எளிமையான எம்.ஆர்.காந்தி
தற்போதைய எம்எல்ஏவான பாஜகவின் எம்.ஆர்.காந்தி மீண்டும் களம் இறங்கியுள்ளார்.
82 வயதான இவர், ஜாதி, மதபேதமின்றி அனைத்து தரப்பினரிடமும் அன்பாகவும், எளிமையாகவும் பழகுபவர் என்ற பெயர் பெற்றவர். பாஜக வேட்பாளராக குளச்சல், நாகர்கோவில் தொகுதிகளில் பல முறை போட்டியிட்டு தொடர் தோல்விகளை சந்தித்த அவர், கடந்த தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் களம் இறங்கிய போது, ‘எளிமையான இம்மனிதரை சட்டப்பேரவைக்கு அனுப்புவோம்’ என முடிவெடுத்த மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்தனர்.
திமுகவின் திட்டங்களை கூறி வாக்கு கேட்கும் திமுக வேட்பாளர் ஆஸ்டின்.
பாஜக வாக்கு மட்டுமின்றி ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு கிடைத்த வாக்குகளால், திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி எம்.ஆர்.காந்தி வெற்றிபெற்றார். இம்முறையும் அவர் தொடர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை பாஜகவினரிடையே உள்ளது. அவர் தனது வழக்கமான பாணியில் காலில் செருப்பின்றி வீதிவீதியாக மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தொகுதி மாறிய ஆஸ்டின்
இவரை எதிர்த்து திமுகவின் முக்கிய நிர்வாகியான ஆஸ்டின் போட்டியிடுகிறார். கடந்த முறை கன்னியாகுமரியில் அடைந்த தோல்வியால், இம்முறை தொகுதி மாறி நாகர்கோவிலில் போட்டியிடும் ஆஸ்டின், சிஎஸ்ஐ அமைப்பில் நிர்வாகியாக உள்ளார்.
நாகர்கோவில் நகரில் இரவு நேர வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்துக்குமார்.
நாகர்கோவில் தொகுதியில் பரவலாக உள்ள கிறிஸ்தவ வாக்குகள் மற்றும் திமுகவின் நலத்திட்டங்களால் கிடைக்கப்போகும் வாக்குகள் போன்றவை தனக்கு கைகொடுக்கும் என ஆஸ்டின் நம்புகிறார். இம்முறை வென்றே ஆகவேண்டும் என்ற இலக்குடன் இரவு, பகலாக பிரச்சாரத்தில் ஆஸ்டின் தீவிரம் காட்டி வருகிறார்.
முன்னணியில் இன்னும் இருவர்
தவெக வேட்பாளராக நாகர் கோவிலை சேர்ந்த பெர்வின் கிங்ஸ் போட்டியிடுகிறார். நாகர்கோவில் தொகுதியில் விஜய்க்கு பரவலாக ரசிகர்கள் உள்ள நிலையில், முதலாவதாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் தனக்கு அதிக அளவில் வாக்களிப்பார்கள் என நம்புகிறார்.
நாகர்கோவில் தொகுதியில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வரும் இவர், திமுகவுக்கு சாதகமான, தொகுதியில் அதிகமாகவுள்ள கிறிஸ்தவர்கள் வாக்குவங்கியை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறார்.
பெண்களிடம் வாக்கு சேகரிக்கும் தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முத்துக்குமார், ‘நாகர்கோவில் நகரை மாசற்ற இயற்கையான பசுமை நகரமாக மாற்றுவேன்’ என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொகுதி மக்களின் எதிர்ப்பார்ப்புகள்
நாகர்கோவில் பீச்ரோட்டில் மக்கள் அதிகம் வசிக்கும் வலம் புரிவிளை பகுதியில் இருந்து மாநகராட்சி குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களின் தீராத பிரச்சினையாக உள்ளது.
மாநகராட்சி சார்பில் பல ஆண்டுகளாக நடைபெற்ற பாதாள சாக்கடை திட்டப்பணி நிறைவடைந்தாலும், இதுவரை முறையாக நடைமுறைக்கு வராதது, கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர்தட்டுப்பாடு, மாநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடி, மேம்பாலங்கள் அமைப்பதாக கூறி இதுவரை அவை நடைமுறைக்கு வராதது போன்றவை தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன.
நாகர்கோவில் தொகுதியில் கிறிஸ்தவ நாடார்கள், இந்து வெள்ளாளர், பட்டியலினத்தவர் உட்பட அனைத்து சமுதாயத்தினரும் நிறைந்துள்ளனர். 4 முனை போட்டிக்கு மத்தியில், பாஜக, திமுக இடையேயான இருமுனை போட்டியே பலமாக உள்ளது. யார் வென்றாலும் குறைந்தவாக்கு வித்தியாசத்தில் தான் தொகுதியை பிடிப்பர் என்பது மக்கள் கணிப்பு.
வாக்காளர்கள் விவரம்
ஆண் - 1,26,738
பெண் - 1,32,180
மூன்றாம் பாலினத்தவர் - 10
மொத்த வாக்காளர்கள் - 2,58,928