தமிழகம்

200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் பலன்?

டெக்ஸ்டர்

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜய், தனது முதல் அரசாணையாக 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். 

இந்த அறிவிப்பு, தமிழகத்தின் ஏழை எளிய குடும்பங்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள அதே வேளையில், அதன் நடைமுறை நுணுக்கங்கள் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தினால் அதிகம் பலனடையப் போவது மாதத்திற்கு 200 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் எளிய குடும்பங்கள் தான். இதுவரை 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு யூனிட்டுக்கும் கட்டணம் செலுத்தி வந்தவர்கள், இனி 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ஒரு ரூபாய் கூட மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஒரு எளிய குடும்பத்தின் வீட்டில் இரண்டு மின்விசிறிகள், ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் சில விளக்குகள் மட்டுமே பயன்படுத்துபவர்களுக்கு, (200 யூனிட்களுக்குள் பயன்படுத்தினால்) மின்கட்டணம் பூஜ்ஜியமாக மட்டுமே வரும்.

இன்னொரு புறம், முந்தைய நடைமுறையின்படி, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகை அனைவருக்கும் கிடைத்துவந்தது. அந்த சலுகை இனியும் தொடரும் என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

200 முதல் 500 யூனிட்டுகளுக்குள் பயன்படுத்துபவர்களுக்கு, இந்தத் திட்டம் பழைய முறையை விடக் கூடுதல் லாபத்தைத் தரும். சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்தும் எளிய மக்களுக்கு இந்த திட்டம் பலன் தரக்கூடியதாக இருக்கும்.

ஆனால், தற்போது நடுத்தரக் குடும்பங்களிலேயே வீட்டுக்கு இரண்டு ஏசி இருக்கிறது. கோடைக்காலங்களில் கடும் வெப்பம் காரணமாக இந்த இரண்டு ஏசிகளும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை. 

அதே போல தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று விஜய் தெரிவித்தார். ஆனால் தற்போது இரண்டு மாதங்களுக்கு, அதுவும் 500 யூனிட்களுக்குள் பயன்படுத்தினால் மட்டுமே 200 யூனிட் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் அனைவருக்கும் 200 யூனிட் இலவசம் வழங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.12,000 கோடி கூடுதல் செலவாகும். ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் மின்சார வாரியத்தைப் பாதுகாக்கவே, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் என்ற உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

500 யூனிட்களுக்குள் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் அதே வேளையில், 500 யூனிட்களை கடந்தால் பழைய முறைப்படி 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகாமல்  தொடர வேண்டும் என்பதே நடுத்தர மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், ‘தகுதியுள்ள அனைத்து வீட்டு உபயோக மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவும், பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்யவும், மக்களின் நிதி நெருக்கடியைக் குறைக்கவும், சாமானிய மக்கள் மீதான சுமையைக் குறைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

மேற்கண்ட அறிவிப்பின் அடிப்படையில், இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, மொத்தம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும்; இதற்காக ஆண்டுக்கு ரூ.1,730 கோடி கூடுதல் மின் கட்டண மானியத்தை அரசே ஏற்கவும் இவ்வரசு இதன் மூலம் ஆணையிடுகிறது.

இரு மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோரைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உட்பட, தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணக் கட்டமைப்பே தொடர்ந்து அமலில் இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT