சென்னை: ‘மேற்காசியப் போர் பாதிப்புகளுக்காக தயாராக இருக்க வேண்டியது மத்திய அரசா? மக்களா?’ என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கரோனாவுக்குத் தயாரானது போல் மேற்காசியப் போரின் பாதிப்புகளுக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் பிரதமர். கடந்த 11-ம் தேதி போர்ச் சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து, அனைத்துப் பயன்பாடுகளுக்குமான சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும், மின் நிலையங்களுக்கான எரிவாயு விநியோக அளவுக் கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என தங்களுக்கு கடிதம் எழுதினேன்.
அதைத்தொடர்ந்து 12-ம் தேதி நிலைமையின் தீவிரத்தை மத்திய ஆட்சியாளர்களுக்கு உணர்த்த நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. 14-ம் தேதி தங்களது நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், பொறுப்புள்ள மாநில அரசாக உயர்நிலை ஆலோசனை மேற்கொண்டு, உணவு உற்பத்தித் தொழிற்கூடங்கள் எல்பிஜி-க்குப் பதிலாக மின் அடுப்புகளைப் பயன்படுத்தும் போது ஏற்படும் கூடுதல் மின்சார நுகர்வு, யூனிட் ஒன்றுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என அறிவித்தோம்.
மேலும், குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் மின் அடுப்புகள், மின் சூடேற்றிகள் கொள்முதல் செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன், தொழிற்சாலைகள் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இசைவாணை பெறத் தேவையில்லை என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வெளியிட்டோம்.
அப்போதே மக்கள் நலனைக் காக்க மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று கேட்டேன், அப்போதும் பதில் இல்லை. அதன்பிறகு மார்ச் 15-ம் தேதி, தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றி செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, ‘மக்கள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும்முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான், ‘எங்களைக் காக்க பிரதமர் தயாராக இருக்கிறாரா?’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.