அதிமுக, திமுக, பாஜக என அனைத்துக் கட்சிகளுமே கொங்கு மண்டலத்தை குறிவைத்து தேர்தல் வியூகங்களை வகுத்து வரும் நிலையில், செங்கோட்டையன் வருகையின் மூலம் தவெக-வும் இப்போது இந்த வியூக வளையத்துக்குள் வந்திருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த முறை 44 தொகுதிகளை அதிமுக - பாஜக கூட்டணி அள்ளியது. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது. பொதுவாக, எம்ஜிஆர் காலத்திலிருந்தே கொங்கு மண்டலம் அதிமுக-வுக்கு செல்வாக்கான பகுதியாக இருந்து வருகிறது. சினிமா கவர்ச்சியும் இதற்கு முக்கியக் காரணம்.
இந்த நிலையில், 1998-ல் நடந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு கோவை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பாஜக-வின் செல்வாக்கும் கணிசமாக உயர ஆரம்பித்திருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததைப் போல விஜய்க்கும் கொங்கு மண்டலத்தில் ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதை அரசியல்படுத்தும் தளபதியாக செங்கோட்டையன் அங்கு போய்ச் சேர்ந்திருக்கிறார். விஜய்யை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதைவிட தன்னை தள்ளிவைத்த பழனிசாமிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று சபதமே எடுத்திருக்கும் செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் அதிமுக-வை சாய்த்து தவெக-வை வளர்க்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார். அதற்காகவே கொங்கு மண்டலத்தில் உள்ள சில மாவட்டங்களை முழுமையாக அவரது பொறுப்பில் ஒப்படைத்திருக்கிறார் விஜய்.
பாஜக மீண்டும் தங்கள் கூட்டணிக்குள் வந்திருப்பதால் தங்களுக்கு புதுத் தெம்பு வந்திருப்பதாக கொங்கு அதிமுக-வும் குஷியாகவே இருக்கிறது. இம்முறையும் கோவை மாவட்டத்தில் பத்துக்கு பத்து தொகுதிகளையும் பழனிசாமிக்கு பரிசாகக் கொடுக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.
பாஜக-வுக்கும் அதிமுக தங்களை மீண்டும் கூட்டணிக்குள் இணைத்துக் கொண்டதில் கொண்டாட்டம் தான். ஏனென்றால், தங்கள் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை பாஜக தலைவராக்கப்பட்ட பிறகு கொங்கு மண்டலத்தில் பாஜக இன்னும் அபரிமிதமான வளர்ச்சி கண்டிருக்கிறது. அதனால், எத்தனை செங்கோட்டையன்கள் போனாலும் எங்களுக்குக் கவலையில்லை என்ற மனநிலையில் இருக்கிறது கொங்கு மண்டல அதிமுக - பாஜக கூட்டணி.
‘கொங்கு அதிமுக-வின் கோட்டை’ என்ற ரெக்கார்டை தகர்க்கும் முயற்சியில் திமுக-வும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இம்முறை பலவிதமான சித்துவேலைகளைச் செய்து வருகிறது. அதற்காகவே ‘அரசியல் சித்தர்’ செந்தில்பாலாஜியை இங்கே அனுப்பி இருக்கிறது. கடந்த முறை கரூர் மாவட்டத்தில் திமுக-
வுக்கு நூற்றுக்கு நூறு வெற்றியைச் சாத்தியப்படுத்திக் கொடுத்த செந்தில் பாலாஜியை கோவையில் குடியேற்றிய திமுக தலைமை, அவருக்குத் துணையாக அமைச்சர் சக்கரபாணியையும் அனுப்பி வைத்திருக்கிறது. மற்ற கட்சிகளில் உள்ள களப் போராளிகளை அடையாளம் கண்டு அவர்களை கொத்தித் தூக்கிவது தான் செந்தில்பாலாஜியின் அரசியல் உத்தி. அதை முன்கூட்டியே தொடங்கிவிட்ட லேட்டஸ்டாக சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம் எல்ஏ-வான சின்னசாமியை திமுக-வுக்கு அழைத்து வந்திருக்கிறார்.
அடுத்து, சொந்தக் கட்சியில் விளைச்சலுக்கு தடையாய் இருக்கும் களைகளை அடையாளம் கண்டுபிடித்து தலைமை மூலம் அவர்களை களையெடுத்தும் வருகிறார். கொங்கு வெற்றிக்காக செந்தில் பாலாஜி என்ன சொன்னாலும் அப்பீல் இல்லாமல் செய்துகொடுக்கிறது அறிவாலயம்.
கொங்குவைப் பிடித்தால் கோட்டையைப் பிடித்தது மாதிரி என நினைக்கும் பிரதானக் கட்சிகள் அதற்கான வியூகங்களை வகுத்துச் செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. அந்த வகையில், செந்தில் பாலாஜியை திமுக-வும் எஸ்.பி.வேலுமணியை அதிமுக-வும் செங்கோட்டையனை தவெக-வும் களத்தில் இறக்கிவிட்டுள்ளன. இந்த மூவரில் கோட்டைக்குச் செல்லும் சூட்சுமத்தை இம்முறை யார் கைகொள்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.