தமிழகம்

தென் மாவட்டங்கள் யாருக்குச் சாதகம்? - மைக்ரோ பிளான் திமுக... மலை போல் நம்பும் அதிமுக!

குள.சண்முகசுந்தரம்

கடந்த 2021 தேர்தலை விட இந்த முறை தென் மாவட்டத் தொகுதிகளை வென்றெடுப்பதில் அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் அதிக முனைப்புக் காட்டுகின்றன. காரணம், இரண்டு கூட்டணிகளுக்கும் கடந்த முறை தென் மாவட்டங்கள் தந்த சாதக, பாதகங்கள்.

ஜெயலலிதா இருந்தவரைக்கும் தென் மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகள் அதிமுக கோட்டையாகத்தான் இருந்தன. ஆனால், அதன் பிறகுதான் அந்த மக்களின் சிந்தனைகள் மாறிவிட்டன. எடப்பாடி தலைமையிலான அதிமுக-வுக்கு ‘கவுண்டர் கட்சி’ என்ற முத்திரை குத்தப்பட்டதே அதன் காரணம். தென் மாவட்டங்களில் உள்ள 58 சட்டப் பேரவைத் தொகுதிகளில் முக்குலத்தோர், நாடார், பட்டியலினத்தோர் வாக்குகள் தான் பெரும்பகுதி வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பவை.

          

கடந்த தேர்தலில் சசிகலாவும் தினகரனும் அதிமுக-வுக்கு வெளியில் நின்றார்கள். ஓபிஎஸ்ஸின் அடித்தளமும் அங்கே ஆடிக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம் எனப் புறப்பட்ட தினகரன், தென் மாவட்டங்களில் எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு பங்கம் உண்டாக்கினார்.

இதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தே இந்த முறை சசிகலா, தினகரன், ஓபிஎஸ் என மூவரையுமே தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர அரும்பாடு பட்டது பாஜக. ஆனால், தான் பெற்ற முன் அனுபவத்தை எல்லாம் நினைத்துப் பார்த்து மூவரையும் உள்ளே கொண்டுவர முட்டுக்கட்டை போட்டார் பழனிசாமி.

இதனால், கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் மாற்று அணியில் இடம்பிடித்து அதிமுக-வின் வெற்றிக்கு சவால்விடத் தயாரானார் தினகரன். இந்த நிலையில் தான், பழனிசாமியிடம் ‘பேசவேண்டிய விதத்தில்’ பேசி தினகரனை மட்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டது பாஜக. ஆனாலும் அவர்களால் தென் மாவட்ட விவகாரத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

பழனிசாமியை தீவிரமாக எதிர்த்து வந்த தினகரன், திடீரென முடிவை மாற்றிக் கொண்டதை சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், தினகரனையும் சேர்த்தே பழி தீர்ப்பதற்காக இருவரும் இப்போது ஆளுக்கொரு முடிவை எடுத்திருக்கிறார்கள். வாய்ப்புகள் தேடி வந்தபோதெல்லாம் விட்டு விட்டு காலம் போன காலத்தில் புதுக் கட்சி ஆரம்பிக்கப் போவதாகப் புறப்பட்டிருக்கிறார் சசிகலா. இவரின் நோக்கம் கோட்டையைப் பிடிப்பது அல்ல. பழனிசாமியை கோட்டைக்குப் போகவிடாமல் தடுப்பது தான்.

இம்முறையும் பழனிசாமிக்கு பின்னடைவு ஏற்பட்டால், அதன் பிறகு அதிமுக அவர் சொல்வதைக் கேட்காது. கட்சிக்குள் பெரும் குழப்பம் வெடிக்கும். அதை வைத்து அதிமுக-வை தங்கள் வசப்படுத்தி விடலாம் என்பதே சசிகலா தரப்பினர் போடும் கணக்கு. அதற்காக தென் மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் அமைப்புகளை சாதி ரீதியாக சசிகலா தரப்பினர் சந்தித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் டெல்டாவிலும் நடப்பதாகச் சொல்கிறார்கள். முக்குலத்தோர் வாக்கு வங்கி எங்கெல்லாம் கணிசமாக இருக்கிறதோ அங்கெல்லாம் தங்கள் செலவில் வேட்பாளர்களை நிறுத்தி ஓட்டைப் பிரிப்பதே சசிகலா தரப்பின் ‘ஆக்கபூர்வமான’ திட்டம்.

இதேபோல் தங்கள் பக்கம் வந்திருக்கும் ஓபிஎஸ்ஸை வைத்து திமுக-வும் முக்குலத்தோர் வாக்கு வங்கியை வளைக்க ஒரு கணக்குப் போடுகிறது. ஓபிஎஸ் செல்வாக்கான தலைவர் என்று சொல்லமுடியாது என்றாலும், “திட்டமிட்டு நம்மை புறக்கணித்து விட்டார் பழனிசாமி” என தென் மாவட்ட பிரச்சாரங்களில் ஓபிஎஸ்ஸை பேசவைக்கத் தயாராகிறது திமுக. ஆக, இதுவரை பேசாமலே இருந்து பழகிவிட்ட ஓபிஎஸ், இந்தத் தேர்தலில் செலவே இல்லாமல் திமுக-வுக்கு பிரச்சார பீரங்கியாக இருக்கப் போகிறார்.

2016-ல் “யாருடனும் கூட்டணி இல்லை” என திடமாக முடிவெடுத்த ஜெயலலிதா, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸை திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தினார். அவருக்கு சீட் கொடுத்திருக்காவிட்டாலும் அப்போது அதிமுக ஜெயித்திருக்கும்.

ஆனாலும், சாதிய கூட்டணி கணக்குப் போட்டு கருணாஸுக்கு சீட் கொடுத்தார் ஜெயலலிதா. பத்து ஆண்டுகள் கழித்து அதே ஃபார்முலாவை கையிலெடுத்து திமுக-வும் இப்போது அதே கருணாஸை உதயசூரியனில் நிறுத்துகிறது. ஓபிஎஸ், கருணாஸ் எல்லாம் மக்கள் தலைவர்கள் இல்லை என்றாலும் “முக்குலத்து தலைவர்களை திமுக கைவிடாது” என்று பேசவைப்பதே இதன் நோக்கம்.

அதேபோல், கடந்த தேர்தலில் தினகரனுக்கு கைகொடுத்த எஸ்டிபிஐ கட்சியையும் சந்தடிச் சாக்கில் தங்கள் பக்கம் கொண்டு வந்துவிட்டது திமுக. இது மாத்திரமல்லாது, அடுத்து வரும் நாட்களில் சமுதாய அமைப்புகளை வரிசையாக அறிவாலயம் வரவைத்து. “எங்கள் ஆதரவு திமுக கூட்டணிக்குத் தான்” என சொல்லவைக்கவும் ஒரு பிளான் ரெடியாகிறது.

இந்த மூவ்கள் எல்லாமே, பார்டரில் நிற்கும் திமுக கூட்டணியின் வேட்பாளர்களை ‘ஜஸ்ட் பாஸ்’ போட்டாவது கோட்டைக்கு அனுப்பி வைக்கும் என நம்புகிறார் ஸ்டாலின். ஆனால், கடந்த முறை பழனிசாமி மீதிருந்த கோபத்தில் தினகரனை ஆதரித்த தென் மாவட்ட முக்குலத்து மக்கள், இம்முறை ஓபிஎஸ் இருக்கிறார் என்பதற்காகவும் அவர் பேச்சை நம்பியும் திமுக-வுக்கு வாக்களிப்பார்களா என்பதை தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் தான் தெரியும்.

தென் மாவட்ட தொகுதிகளை தக்கவைக்க திமுக இப்படி மைக்ரோ லெவலில் சிந்தித்துக் கொண்டிருக்க, “எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த தென் மாவட்ட மக்கள் இந்தத் தேர்தலில் என்டிஏ அதிக இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமையவும் துணை நிற்பார்கள்” என்கிறார் பழனிசாமி.

கூட்டணி பலமும் அரசுக்கு எதிரான அதிருப்தி அலைகளும் தமிழகம் முழுமைக்குமே தங்களை ஜெயிக்க வைக்கும் என நினைக்கும் அதிமுக, திமுக அமைச்சர்களுக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகள் ஏவக் காத்திருக்கும் அம்புகளையும் மலைபோல் நம்பிக் கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT