கும்பகோணம்: சன்ன ரக அரிசி 1 கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை வேளாண்மை துறை அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார்.
கும்பகோணம் சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சுய சேவை பிரிவில், சன்ன ரக அரிசி 1 கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட வேளாண்மை துறை அமைச்சர் வினோத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வினோத், “தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு 20 ஆயிரம் கிலோ சன்ன அரிசி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் மளிகை பொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் உணவுத்துறை மூலம் மேற்கொண்டு வருகிறோம். அரிசி மூட்டைகள் வெளிநாட்டுக்கு கடத்தப் படவில்லை. அப்படி கடத்தப்படுவது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பாசன, வடிகால் வாய்க்கால்கள், நீர்நிலைகளை சீரமைத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேட்டூர் அணையில் உள்ள நீரின் இருப்பின் அளவின் படி தண்ணீர் திறக்கப்படும். சம்பா சாகுபடி 8 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எல் நினோ, தாமதமாக நீர் வந்தது போன்ற காரணத்தால் சில விவசாயிகள் தாமதமாக சாகுபடி செய்துள்ளனர். இனி வரும் காலங்களில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள், சட்டம் தன் கடமையை செய்யும்” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ரேவதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முத்துக்குமார், கும்பகோணம் சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை பொது மேலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ரேவதி சன்ன அரிசியை பார்வையிட்டார். அப்போது பயனாளிகளுக்கு வழங்கப்படும் அரிசி பையில் முதல்வர் படம் இல்லாததை அறிந்த அதிகாரிகள், உடனடியாக 10 சிறிய அளவிலான முதல்வர் விஜய் படத்தை வாங்கி வந்து அரிசி பையில் ஓட்டினர். அப்போது அங்கு அதே பண்டக சாலை பெண் விற்பனையாளர்கள் 2 பேர் பயனாளிகளாக வந்தனர்.
இதை அறிந்த மற்ற அதிகாரிகள் அருகில் உள்ள கடைகளில் இருக்கும் பெண்களை அழைத்து வந்து அரிசி வாங்க வைத்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து அரிசி பைகளை திரும்ப வாங்கிக்கொண்டு வெறும் கையோடு வெளியில் அனுப்பினார். பின்னர் அந்த அரிசியை அந்த பண்டக சாலை ஊழியர்கள் பத்திரமாக எடுத்துச் சென்று அறைக்குள் வைத்து பூட்டினர்.