யாருடன் கூட்டணி என முடிவெடுக்க முடியாமல் வழக்கம் போல் ‘இழுத்துக்’ கொண்டிருக்கும் பிரேமலதா, “இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாக, யாருடன் கூட்டணி எனச் சொல்லி விடுவோம்” என அடுத்த கெடுவை வைத்திருக்கிறார்.
பிரேமலதா தங்கள் பக்கம் வந்தால் ‘சிறப்பு’ என கணிக்கிறது திமுக தலைமை. ஆனால், விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏ-வான எம்.ஆர்.ராதாகிருஷ்ணனும், ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ-வான வசந்தம் க.கார்த்திகேயனும் ‘திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்துவிடக் கூடாது தெய்வமே...’ என இஷ்ட தெய்வங்களை எல்லாம் ‘இன்ஸ்டால்மென்ட்டில்’ வேண்டிக் கொண்டே இருக்கிறார்களாம்.
கடந்த 2006 தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் முதன் முதலாக தனித்துப் போட்டியிட்டு வெற்றிக் கொடி நாட்டினார் விஜயகாந்த். அதற்கு அடுத்த தேர்தலிலும் இங்கு தேமுதிக-வுக்கே ஜெயம் கிட்டியது. இதனால், விருத்தாசலத்தின் மீது தேமுதிக-வுக்கு எப்போதுமே தனி பிரியம் உண்டு. இதேபோல் 2011 தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் விஜயகாந்த். இதனால் இந்தத் தொகுதியையும் மறக்காமல் தனது விருப்பப் பட்டியலில் வைத்திருக்கிறது தேமுதிக.
இம்முறை, தேமுதிக திமுக கூட்டணிக்கு வருமேயானால் இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றை நிச்சயம் தங்களுக்குக் கேட்கும். விருத்தாசலத்தைக் கேட்டால் கூட திமுக விட்டுக் கொடுத்துவிடும் ஆனால், ரிஷிவந்தியமானது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான வசந்தம் கார்த்திகேயனின் தொகுதி. இதை விட்டுத் தருவதில் திமுக-வுக்கு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தபோதும் ரிஷிவந்தியம் கார்த்திகேயனும் விருத்தாசலம் ராதாகிருஷ்ணனும் பிரேமலதாவின் ‘பிரேக்கிங் நியூஸ்’ எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து தூக்கம் தொலைத்து நிற்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய வசந்தம் கார்த்திகேயனின் ஆதரவாளர்கள், “திமுக கூட்டணிக்கு வந்தால் சென்டிமென்ட்டாக, விஜயகாந்த் போட்டியிட்டு வென்ற விருத்தாசலத்தையும் ரிஷிவந்தியத்தையும் பிரேமலதா பிடிவாதமாகக் கேட்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், ரிஷிவந்தியத்தில் மீண்டும் நாம் தான் நிற்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் வசந்தம் கார்த்திகேயன் கடந்த முறை தனக்கு வாக்களிக்காத மக்களையும் தன்னை நோக்கி திருப்பி இருக்கிறார். இவ்வளவையும் செய்துவிட்டு கூட்டணி முடிவால் தொகுதி நம் கைவிட்டுப் போய்விடுமோ என்ற கவலை அவருக்கு இருக்கிறது. அப்படி ஏதும் நடந்துவிடாதபடிக்கு தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்” என்றனர்.
ராதாகிருஷ்ணின் விசுவாசிகளோ, “விருத்தாசலத்தில் கடந்த முறை ராதாகிருஷ்ணன் பார்டரில் தான் பாஸானார். அதன் பிறகு, கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான அமைச்சர் சி.வெ.கணேசனிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவர், இம்முறையும் தொகுதியை தனக்கே வசப்படுத்திக் கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் கடந்த ஒரு வருட காலமாக செய்து வருகிறார்.
இருந்தாலும் கூட்டணிக் கட்சி தான் என்பதால் விருத்தாசலத்தை தேமுதிக-வுக்குக் கொடுத்து விட்டு காங்கிரஸுக்கு வேறு தொகுதியை ஒதுக்குவதற்கு திமுக சற்றும் தயங்காது என்பதால் கார்த்திகேயனைவிட நம்மாளு ரொம்பவே கலங்கிப் போயிருக்கிறார்” என்றனர். ஆக, கார்த்திகேயன் மற்றும் ராதாகிருஷ்ணனின் தேர்தல் எதிர்காலம் அறிவாலயத்தின் கையில் இல்லை... தேமுதிக-வின் கையில் தான் இருக்கிறது!