அமைச்சர் மரிய வில்சன்
மயிலாடுதுறை: தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது எப்போது? என நிதியமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்துள்ளார்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், நிதி அமைச்சர் மரிய வில்சன் புதுச்சேரியில் இருந்து கடந்த 25-ம் தேதி வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரையாக புறப்பட்டுச் சென்று கொண்டுள்ளார்.
சீர்காழி பகுதிக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்தில் அரசுத் துறைகளில் அதிக அளவில் லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கின்றனர். சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். பள்ளிக்கல்வித் துறையில் கடந்த காலங்களில் லஞ்சம் பெற்று உரிமம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், நான் சாட்சியாக உள்ளேன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற தவெக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, ஜிஎஸ்டி, பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வரக்கூடிய வருவாயைக் கொண்டு இந்தத் தொகை உயர்த்தி வழங்கப்படும். கடந்த திமுக ஆட்சியில் 28 மாதங்களுக்கு பின்னர்தான் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது என்றார்.