ராகுல் காந்தி
சென்னை: நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடைபெற்று வருவதால் ராகுல், பிரியங்கா ஆகியோரின் தமிழக வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான மேலிடப் பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் மூத்த பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், உத்தம்குமார் ரெட்டி, குவாசி நிசாமுதின், தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஏஐசிசி செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரச்சாரப் பாடல்: அதைத்தொடர்ந்து, இளைய கம்பன் எழுதி, ஸ்டீபன் ராயல் இசையமைப்பில் உருவான 'தாய்க்கும் தாயான கட்சி' என்ற காங்கிரஸ் கொள்கை முழக்கப் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது: நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடைபெற்று வருவதால் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழக வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழகத்தில் அவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவார்கள்.
ஒரே மேடையில்.. புதுச்சேரி பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி கேரளா செல்ல வேண்டியிருந்ததாலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததாலும் அவர்கள் ஒரே மேடையில் தோன்றவில்லை. இதை வைத்து சில கட்சிகள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன.
ஆனால், மிக விரைவில் ராகுல் காந்தியும், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து பிரம்மாண்டப் பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். காங்கிரஸ் பேரியக்கத்தின் உண்மையான தொண்டர்கள் எப்போதும் காங்கிரஸில்தான் இருப்பார்கள். அவர்கள் வெளியே செல்ல மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.