நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

“குதிரை பேரம் மூலம் ஆட்சி நடத்தி என்ன செய்ய போகிறீர்கள்?” - நயினார் நாகேந்திரன்

ஆர்.தினேஷ் குமார்

விழுப்புரம்: “முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? குதிரை பேரம் நடத்தி ஆட்சியை நடத்த வேண்டும் என நினைக்கும் நீங்கள், மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்?” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஜனசங்கத்தின் முதல் தலைவர் சியாம் பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காஷ்மீருக்கு தனி நாடு, இந்தியாவுக்கு தனி நாடு என்பதை விரும்பாதவர் சியாம் பிரசாத் முகர்ஜி. இரு பிரதமரை ஏற்க மறுத்தவர். ஓரே நாடு, ஓரே கொள்கை என வாழ்ந்தவர். காஷ்மீருக்குள் நுழைய முயன்றபோது முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சியில் கைது செய்யப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்தார். தேசம், நாடு என்ற உணர்வோடு வாழ்ந்த தலைவருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறோம்.

தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் குதிரை பேரத்தில் ஈடுபட்டனர் என்பது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. தவெக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக எம்எல்ஏ காமராஜை கடத்திச் சென்று, அக்கட்சி பொதுச் செயலாளரின் கையொப்பம் போடப்பட்டுள்ளது. இதற்காக தவெக அரசை என்ன செய்யலாம்?

அதிமுக எம்எல்ஏக்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தவெகவுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். இது குதிரை பேரமா என்பதை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தவெக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

போதை பொருள் விற்பனை தொடர்கிறது. 150-க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்களும், 75-க்கும் மேற்பட்ட படுகொலைகளும் நடந்துள்ளன. தினசரி படுகொலைகள், ஓரே நாளில் 17 பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? குதிரை பேரம் நடத்தி ஆட்சியை நடத்த வேண்டும் என நினைக்கும் நீங்கள், மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்?.

கரூர் கூட்டத்துக்கு நண்பகல் 12 மணிக்கு வருவதாக தெரிவித்துவிட்டு இரவு 7 மணிக்கு விஜய் வந்துள்ளார். அங்கு நடந்த நிகழ்வுக்கு விஜய்யும் ஒரு காரணமாக இருப்பார். 7 மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் கொடுக்கவில்லை. மிகப்பெரிய துயர சம்பவம் நடைபெற்றதும், இடத்தை காலி செய்துவிட்டு சென்னைக்கு ஓடிவிட்டார்.

தலைவராக இருப்பவர் மக்களை பாதுகாக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவிட்டு நீதி கேட்டிருக்க வேண்டும். பின்னர், இறந்தவர்களின் குடும்பங்களை தன்னுடைய வீட்டுக்கு வரவைத்தது சரியா? என்பதுதான் பாஜகவின் கேள்வி.

ஆளுங்கட்சி தயாரித்து கொடுக்கக் கூடிய உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். இதைதான் ஆளுநர் செய்திருக்கிறார். எல்லா வகையிலும் ஆளுநர் ஒத்துழைத்து செல்கிறார். இந்திய அரசியலமைப்பு சட்டம் 167-ன் படி அரசு நிறுவனங்களை ஆளுநர் ஆய்வு செய்யலாம் என்பது விதியில் இருக்கிறது. ஆனால் ஆளுநர் செய்யக்கூடாது என சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? அந்த காலம் முதல் ஆளுநரை வைத்து அரசியல் செய்கின்றனர்.

முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சியினர் பழைய சிந்தனையுடன் செல்ல வேண்டாம். 60 ஆண்டுக்கு பிறகு மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டதைப்போல், அரசியல்வாதிகளின் மனதிலும் மாற்றம் ஏற்பட்டு, மக்களுக்கு அரசியல் கட்சியினர் நல்லது செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

SCROLL FOR NEXT