மதுரை: “திருப்பரங்குன்றம் வழக்கானது தீப உரிமை தொடர்பானது மட்டும் அல்ல, சொத்துரிமை தொடர்பானதும் கூட” என உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக மனுதாரர்கள் ராம.ரவிக்குமார், பரமசிவம் ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், காவல் ஆணையர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன், கோயில் செயல் அலுவலர் தரப்பில் மூத்த வழக்கில் ஜோதி ஆகியோரும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜெ.கார்த்திகேயன், கே.பி.எஸ்.பழனிவேல்ராஜன், வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் வாதிட்டனர்.
அரசுத் தரப்பில், “பிரதான வழக்கின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனு டிச.12-ல் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கில் விரும்பும் நபர்கள் மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடையில்லை. இதனால் தனி நீதிபதி உத்தரவு செல்லுபடியாகும். அந்த உத்தரவை நிறைவேற்றாமல் இருப்பது எப்படி?” எனக் கூறப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில், “மனுதாரர்கள் தரப்பில் பொறுப்பற்ற முறையில் வாதங்கள் முன் வைக்கப்படுகிறது. தீபம் ஏற்றும் 4 நாட்கள் முடிந்துவிட்டது. இதனால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” எனக் கோரப்பட்டது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கானது தீபம் ஏற்றும் உரிமையைச் சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை சார்ந்ததும் ஆகும்” என்றார்.
தொடர்ந்து அரசுத் தரப்பில், “கோயில்களில் இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது என நீதிமன்றம் உட்பட யாரும் சொல்ல முடியாது. தேவஸ்தானம் தான் அதை முடிவு செய்யும். இது தொடர்பாக விரிவான உத்தரவுகள் உள்ளன. ஒரு உத்தரவால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றால் அதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
சட்டம் - ஒழங்கு பிரச்சினை எழுந்தால் அதற்கு நீதிமன்றத்தைக் காரணம் காட்ட முடியாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வரும் வரை இந்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்” எனக் கூறப்பட்டது.
நீதிபதி, “அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கை தள்ளிவைக்கிறேன். அடுத்த விசாரணையின் போது இடைக்கால உத்தரவு பெறப்படாவிட்டால் மீண்டும் ஒத்திவைக்க முடியாது” என்றார்.
மனுதாரர் தரப்பில், “நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் விட்டுவிட்டு, நீதிமன்றம் வந்து, பிச்சை எடுக்கக் கூடாது” எனக் கூறப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், “ஊடகங்களில் தேவையற்ற விவாதங்கள், தரவுகள் பகிரப்படுகிறது. இதை நிறுத்த வேண்டும்” எனக் கூறப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், “மனுதாரர் தரப்பு, மேல்முறையீட்டு வழக்கு வரும் வரை காத்திருக்க வேண்டும், அதை செய்யாமல் முறையற்ற வாதங்களை முன்வைக்கக் கூடாது. மேல்முறையீடு மனு, தனி நீதிபதியின் உத்தரவு சரியா? இல்லையா? என்பதற்காகத் தான். அப்படியிருக்கும் போது தொடக்க நிலையிலேயே எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும்? எனவே, மேல்முறையீடு வழக்கு முடிவுக்காக காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்” எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, வழக்கு முடியும் வரை இடைக்கால தடை கோரலாம்” எனக் கூறப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பில், “இந்த காத்திருப்பு சில நாட்கள் மட்டுமே. அதற்குள்ளாக திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. சட்டம் - ஒழுங்கு தான் மிகப் பெரும் பிரச்சனை. எனவே, மேல்முறையீட்டு வழக்கு விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார். இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண முயல வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “கார்த்திகை தீப நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அது நிறுத்தப்பட்டுள்ளது. யாருடைய அறிவுறுத்தலால் தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. உத்தரவை நிறைவேற்றாமல், மேல்முறையீடு மனு தாக்கல் செய்யாமல் தாக்கல் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.
அரசு தரப்பில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி பொறுமையாக இருந்திருக்கலாம். அரசின் மேல்முறையீடு மனுவை சில திருத்தங்களுக்காக உச்ச நீதிமன்றம் திரும்ப அனுப்பியுள்ளது” எனக் கூறப்பட்டது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
அதேவேளையில், திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலர், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் டிச.17-ல் காணொலி வாயிலாக ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.