தமிழகம்

குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற என்ன செய்ய வேண்டும்? - சென்னை குடிநீர் வாரியம் விளக்கம்

ச.கார்த்திகேயன்

சென்னை: மாநகரப் பகுதியில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணங்களையும் இணைய வழியில் மட்டுமே செலுத்த வேண்டும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், குடிநீர் விநியோக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மணலி மண்டலத்தில் இடையஞ்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம். மாதவரம் மண்டலத்தில் புழல், புத்தகரம், சூரப்பட்டு, கதிர்வேடு, மாதவரம். வளசரவாக்கம் மண்டலத்தில் போரூர்.

நெற்குன்றம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்தில் முகலிவாக்கம், மணப்பாக்கம், நந்தம்பாக்கம். பெருங்குடி மண்டலத்தில் கொட்டிவாக்கம், ஜல்லடியான்பேட்டை, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம். பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்னை குடிநீர் வாரிய தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், மணலி மண்டலத்தில் சின்னசேக்காடு. வளசரவாக்கம் மண்டலத்தில் போரூர். நெற்குன்றம், ஆலந்தூர் மண்டலத்தில் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், முகலிவாக்கம். பெருங்குடி மண்டலத்தில் மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் துரைப்பாக்கம் மற்றும் உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தில் (https://wsc.chennaimetrowater.in/#/nc/login) மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் இணைய வழியில் தகவல் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரர் இணையவழியில் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் வழங்கும் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியாகவும் முழுமையாகவும் இருந்தால், விண்ணப்ப செயல்முறை 15 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும்போது சென்னை மாநகராட்சி சொத்து வரி மதிப்பீட்டு நகல், சிஎம்டிஏ, மாநகராட்சி மூலம் வழங்கப்பட்ட திட்ட அனுமதி, கட்டிட அனுமதி மற்றும் வரைபடம், கட்டிடப் பணிகள் நிறைவு சான்றிதழ் நகல், ஏற்கெனவே உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கட்டணம் செலுத்தியிருந்தால் அதற்கான ஆதாரம் அல்லது ரசீது நகல் இணைக்கப்பட வேண்டும்.

மாநகராட்சியின் வரி மதிப்பீடு செய்யப்படாத கட்டிடங்களுக்கு, ஒவ்வொரு சமமான குடியிருப்பு அலகுக்கும் ரூ.3 ஆயிரம் முன்வரியாக செலுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான உறுதிமொழி அல்லது அறிவிப்பு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

தனி வீடுகள் 46.47 ச.மீ (500 சதுரஅடி) வரை குடிநீர் கட்டணம், கழிவுநீர் கட்டணம் தலா ரூ.100 மட்டும் செலுத்த வேண்டும். 100 சதுர மீட்டர் வரை தலா ரூ.5 ஆயிரம், 101 முதல் 200 சதுர மீட்டர் வரை தலா ரூ.7,500 செலுத்த வேண்டும். சாலைத் துண்டிப்பு, குழாய் பதிக்கும் கட்டணங்கள் மற்றும் குடிநீர் அளவு மானிகள் பொருத்தும் கட்டணங்கள் நடைமுறை விதிமுறைகளின்படி வசூலிக்கப்படும்.

அடுக்குமாடி குயிருப்புகள் 200 சதுர மீட்டர் வரை குடிநீர், கழிவுநீர் கட்டணம் என தலா ரூ.7,500 செலுத்த வேண்டும். குடியிருப்பு அல்லாத அலுவலகம், உள் நோயாளி வசதி இல்லாத மருத்துவமனைகள், தங்கும் வசதி இல்லாத கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் போன்ற வணிக கட்டிடங்களுக்கு ஒவ்வொரு 100 சதுர மீட்டருக்கும் தலா ரூ.7,500/- கட்டணம் வசூலிக்கப்படும்.

ஓட்டல்கள், விடுதிகளுடன் கூடிய கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு ஒவ்வொரு 50 சதுரமீட்டருக்கும் தலா ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும். உள் நோயாளி வசதிகொண்ட மருத்துவமனைகளுக்கு ஒவ்வொரு 25 சதுரமீட்டருக்கு ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

பழைய இணைப்புகளை புதுப்பிக்க, இடம் மாற்ற ஏற்கெனவே உள்ள குடிநீர் அல்லது கழிவுநீர் இணைப்புகளை புதுப்பித்தல் அல்லது வேறு இடத்துக்கு மாற்றுதல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு இணைப்புக்கும் தலா ரூ.7,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

தரைத்தளம் மற்றும் முதல் தளம் வரை 1,800 சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு கட்டணம், சாலை வெட்டு சீரமைப்புக் கட்டணம் அதிகபட்சம் 10 அரையாண்டுத் தவணைகளில் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT