நேபாளத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம்.

 
தமிழகம்

கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற பயணிகளின் நிலை என்ன? - டிராவல்ஸ் நிறுவனம் தகவல்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 57 பேர், கும்பகோணத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி இரவு கைலாஷ் யாத்திரை புறப்பட்டனர். இவர்களை கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் என்ற நிறுவனம் அனுப்பி வைத்தது.

இந்தப் பயணிகள் இன்று திபெத் நாட்டின் காத்மாண்டு பகுதியில் 3 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். இவர்களை நேபாளத்தை சேர்ந்த சாம்ராட் டூரிஸம் அண்ட் டிராவல்ஸ் என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையி, பயணிகளின் நிலை குறித்து கும்பகோணத்தை சேர்ந்த சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் உரிமையாளர் சாதிக் கூறும்போது, “கடந்த 23-ம் தேதி கும்பகோணத்தில் இருந்து கிளம்பியவர்கள் தற்போது திபெத் நாட்டில் சிக்கியுள்ளனர். இன்று (ஆக.26) காலை அவர்கள் சென்ற 2 வாகனங்களும் சிக்கின. காலை 10 மணிக்கு எனக்கு கிடைத்த தகவலின்படி, 20 பேர் பத்திரமாக இருக்கின்றனர்.

மீதமுள்ள 37 பேர் தங்களது உடமைகளை இழந்து ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்து சிவரஞ்சனி என்பவர் எனக்கு இந்தத் தகவலை கொடுத்தார்.

எவ்வித தொலைத் தொடர்பு வசதியும் இல்லாத ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால் அவர்களை அடிக்கடி தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களாக நம்மை தொடர்பு கொண்டால் மட்டுமே பேசமுடியும்.

இந்தக் குழுவில் எனது மகன் உமர் பாரூக் (30), அவர்களுக்கு வழிகாட்டியாக சென்றிருக்கிறார். இவர் ஏற்கெனவே இரண்டு முறை நேபாளத்துக்குச் சென்று வந்திருக்கிறார். மற்றவர்களை போலவே எனக்கும், எனது மகன் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இதுவரை நான் அனுப்பி வைத்த யாத்ரீகர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டதில்லை. எனவே, தற்போதும் அனைவரும் பத்திரமாக மீட்டு வந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில், நேபாளத்தில் இருந்து உரிய தகவல் கிடைக்காத 37 பேரை உடனடியாக மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT