தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விவசாயிகளின் அணுகுமுறை குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். முன்னணி விவசாய சங்கங்களின் தலைவர்கள் அய்யாக்கண்ணு, ராமகவுண்டர், நாமக்கல் வேலுசாமி உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.
பின்னர் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: 5 ஆண்டு கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளையெல்லாம் தூசித்தட்டி எடுத்து விவசாயிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயிகள் விளைநிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்துக் கொள்ள தமிழக அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் கொண்டு வந்து பரந்தூர் விமான நிலையம், பல மாவட்டங்களில் சிப்காட் என விளைநிலங்கள் சூறையாடப்படுகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் விவசாயிகளை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துகிறது. எனவே, வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிப்பதை விவசாயிகள் விரும்பவில்லை. திமுக அரசுக்கு வாக்களிப்பது நாங்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க மார்ச் 31-ம் தேதி திருச்சியில் விவசாயிகள் மாநாடு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.