மதுரை: கட்சியில் ‘சீனியாரிட்டி’ இல்லாததால் கடைசி நேரத்தில் தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மற்றொருவர் அறிவிக்கப்பட்டு மனு தாக்கல் செய்த சுவாரஸ்யம் நடந்தது.
தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் சென்னையில் வைத்து சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இந்தப் பட்டியலில் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளராக ஜோ.பீட்டர் என்பவர் இடம்பெற்றிருந்தார். இவர், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பிரிவு மாவட்ட அமைப்பாளராக உள்ளார். வேட்பாளராக அறிவித்ததால் தொகுதியில் தேர்தல் பணியை தொடர்ந்து மேற்கொண்டார்.
இந்நிலையில், கடைசி நேரத்தில் வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக திடீரென ஜோ.பீட்டர் மாற்றப்பட்டு கட்சியினர் அதிகாரபூர்வ வேட்பாளராக மாவட்ட தொழிலாளர் அணி பிரிவு அமைப்பாளர் எம்.எம்.கோபிசன் அறிவிக்கப்பட்டார். அவர் மதுரை தெற்கு மண்டல அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மணிமாறனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார், வடக்கு மாவட்ட தவெக செயலாளர் கல்லாணை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மனு தாக்கலுக்கு பிறகு முனிச்சாலை சந்திப்பிலுள்ள பின்னணி பாடகர் டி.எம்.சவுந்திராஜன் சிலைக்கு வேட்பாளர் உள்ளிட்ட தவெகவினர் மாலை அணிவித்தனர்.
தவெக வேட்பாளர் மாற்றம் ஏன்?
கட்சி நிர்வாகிகள் இது குறித்து கூறுகையில், "இத்தொகுதி வேட்பாளராக ஜோ.பீட்டர் அறிவிக்கப்பட்டாலும், கட்சி தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து நிர்வாகியாக இருப்பதால் சீனியாரிட்டி அடிப்படையில் தனக்கு தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் கோபிசன் கோரிக்கை வைத்தார். கட்சி தலைமை பரிசீலித்து அவரை வேட்பாளராக அறிவித்த நிலையில், அவர் மனு தாக்கல் செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.