சென்னை: பெண்கள் பாதுகாப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, அடுத்த 3 மாதங்களில் தமிழகம் தழுவிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பணிகளை அண்ணாமலையின் ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு முன்னெடுக்கிறது.
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பணிகளை முன்னெடுத்து வருகிறது.
கடந்த ஜூலை மாதம் போதைப் பொருளுக்கு எதிராகவும், நடப்பு ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளிலும் கவனம் செலுத்திய நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கான திட்டங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, செப்டம்பர் மாதத்தில் ‘பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல்’ என்ற கருப்பொருளுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இதில் குறிப்பாக 5 முக்கிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாதுகாப்பற்ற பொது இடங்களை அடையாளம் கண்டு சரிசெய்தல், போக்குவரத்து பயணங்களில் உள்ள பாதுகாப்பு இடைவெளிகளைக் குறைத்தல், அவசர கால உதவி மற்றும் ஆதரவு பெறுவதில் உள்ள தடைகளை நீக்குதல், சமமற்ற பொருளாதார வாய்ப்புகளைச் சீரமைத்தல், தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் ஆகியவை அடங்கும். அக்டோபர் மாதம் ‘இளைஞர் திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வழிகாட்டுதலை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியில், தெளிவற்ற பயிற்சி முறைகளைச் சீரமைத்தல், முறையான வழிகாட்டிகள் கிடைப்பதை உறுதி செய்தல், சான்றிதழ் இல்லாத தனித்திறன்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருதல், வேலை வழங்குவோருடன் இளைஞர்களை நேரடியாக இணைத்தல், முதல் வேலைவாய்ப்பைப் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிறுத்தி, நவம்பர் மாதம் ‘பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்துதல்’ என்ற பெயரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி, கிராமப்புற நிர்வாகத்தில் மக்கள் பங்களிப்பை அதிகரித்தல், உள்ளாட்சிப் பொறுப்புகளில் உள்ள தெளிவற்ற தன்மையை நீக்குதல், உள்ளூர் தரவுகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்களைச் சரிசெய்தல், நிர்வாக முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், எடுக்கப்பட்ட முடிவுகளைத் தொய்வின்றிச் செயல்படுத்துதல் ஆகிய 5 அம்சங்களில் இந்த அமைப்பு கவனம் செலுத்தவுள்ளது.
இந்த விழிப்புணர்வுப் பணிகளை அந்தந்தத் துறையைச் சார்ந்த வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, மக்கள் பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டு, அதிகப்படியான மக்களை ‘வி த லீடர்ஸ்’ அமைப்பின் கீழ் ஒருங்கிணைப்பதே அண்ணாமலையின் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.