பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளையும் வசப்படுத்தி இருக்கிறது தவெக.
மதுராந்தகம் தொகுதியில் ஆரம்பம் முதலே தவெக முன்னிலை வகிக்க, மிகவும் கவனம் ஈர்த்த தாராபுரத்தில் தவெக முதலில் முன்னிலை, பின்னர் அதிமுக முன்னிலை என்று சில சுவாரஸ்யங்கள் நிலவின. ஐந்தாவது சுற்றிலில் இருந்து தவெக மீண்டும் நிதானமான முன்னிலை பெறத் தொடங்கியது. வாக்கு வித்தியாசமும் கணிசமாக அதிகரித்தது. அதன்பின், இரண்டாம் இடத்துக்கு நடந்த கடும் போட்டியில், அதிமுகவை பின்னுக்குத் தள்ளியது திமுக.
இந்த நிலையில், தவெக வெற்றி பெற்றுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன என்பது குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் தமிழகத்தில் கவனம் பெற்றது. காரணம், சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமாரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இருந்தாலும், தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதேவேகத்தில் தவெகவில் அவர்கள் இணைந்தனர். இதனால், அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. குதிரை பேரம், துரோகம் என்ற அத்தனை விமர்சனங்களையும் தாண்டி, அவர்களே தவெக வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என இரண்டு தொகுதிகளிலும் ஐந்து முனைப் போட்டி உருவானது.
இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட தேர்தல். தவெக குதிரை பேரத்தின் விளைவு போன்ற கருத்துகளை தவெகவை எதிர்த்த அனைத்துக் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டன.
ஆனால், அத்தனை விமர்சனங்களையும் கடந்து இரு தொகுதிகளிலும் தவெக அதே வேட்பாளர்களை களமிறக்கியது. மதுராந்தக தேர்தல் பொறுப்பை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் தவெக ஒப்படைத்தது. அங்கு சூறாவளிப் பிரச்சாரம் செய்த அவர் ஆரம்பத்திலிருந்தே ‘மதுராந்தகத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவில்லை என்றால் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா’ செய்கிறேன் என்று சூளுரைத்தார்.
கட்சித் தாவியவர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியதால்; தவெகவுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே இடைத்தேர்தலிலும் இடதுசாரிகள் போட்டியிடுவதால்; மின்வெட்டுப் பிரச்சினையால்; தவெக ஆட்சி மீது எழுந்துள்ள அதிருப்தியால்; தாராபுரம் அதிமுக கோட்டை என்பதால்; கடைசியாக தேர்தல் நாளில் வெளியான தவெக வேட்பாளர் சத்யபாமாவின் வீடியோவால் இடைத்தேர்தல் முடிவில் மாற்றம் வரும் என்று பேசப்பட்டது.
ஆனால், அத்தனையையும் மீண்டும் தவிடுபொடியாக்கியுள்ளது இடைத்தேர்தல் முடிவுகள். இதற்கு சில காரணங்களைப் பட்டியலிடுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
தவெக ஆட்சி அமைந்து 5 மாதங்கள்தான் ஆகின்றன. மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த மக்கள், அதற்கான அவகாசத்தை தவெகவுக்கு கொடுக்க இன்னமும் தயாராக இருக்கிறார்கள் என்று ஒரு கோணத்தில் இதை அணுகலாம். இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கே சாதகம் என்பது பெரும்பாலும் தப்பியதில்லை. அந்த பொது விதியும் இங்கே பொருந்துகிறது எனக் கூறுகின்றனர்.
அதைத் தாண்டி தவெகவின் மெனக்கிடல் கவனிக்கத்தக்கது. மக்களின் எதிர்ப்பு மனநிலை, விமர்சனங்கள் எல்லாவற்றையும் துல்லியமாகக் கணித்த தவெக முதல்வர் விஜய்யின் பிரச்சாரத்தை இரண்டு தொகுதிகளிலும் தீவிரப்படுத்தியதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
கள நிலவரம் மாறலாம் என்று பேசப்பட நிலையில், முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளிலும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொண்டார். இரண்டுமே அளவில் சிறிய ஊர் என்றாலும் கிராமங்கள் வரைச் சென்று பிரச்சாரம் செய்தார். டிராக்டர் ஓட்டியது, மாட்டு வண்டி ஓட்டியது என அவர் எடுத்த ஸ்டன்ட்டுகள் கேலி பேசப்பட்டன. இருந்தாலும் எப்போதும் தான் சொல்வதுபோல் கான்ஃபிடன்ட்டாகவே விஜய்யும், அவருடைய தவெகவும் தேர்தலை எதிர்கொண்டது.
இந்நிலையில்தான் ஆளும் தவெக தொடர்ந்து முன்னிலை வகித்து மதுராந்தகம், தாராபுரம் இரண்டு தொகுதிகளையும் வசப்படுத்தி இருக்கிறது.
இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்ற பாமகவின் நிலைப்பாடும், தவெக பக்கம் சாய்கிறாரா அன்புமணி என்ற விவாதங்களும் தவெகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.
இருப்பினும், இந்த இடைத்தேர்தல் முடிவுகளில் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது வாக்கு வித்தியாச எண்ணிக்கை.
தாராபுரம் தொகுதியின் வாக்கு முன்னிலை நிலவரம் ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமாகச் சென்றது. முதலில் தவெக முன்னிலை... பின்னர் அதிமுக முன்னிலை எனத் தொடங்கி, இடையில் அதிமுக முன்னிலை எனப் போக்குக் காட்டியது. பின்னர் மீண்டும் தவெக முன்னிலைக்கு வர, அதிமுகவுடன் போட்டா போட்டி போக்கு உருவானது. அதன்பின், திமுக இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
இந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் சுமார் 25,000, 10,000 என்று இருப்பது நிச்சயமாக ஆளும் தவெக மீதான அதிருப்திதான் என்று சுட்டிக்காட்டுகின்றனர் சில அரசியல் விமர்சகர்கள்.
ஒருவேளை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பிருந்த தவெக மீதான அபிமானம் இப்போதும் இருந்திருந்தால் காலை 11 மணி தொடங்கியே மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை நிலவரங்கள் வந்திருக்கும் என்கின்றனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் கடந்த முறை ரங்கசாமி வாங்கிய வாக்குகளைவிட இப்போது என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகளைப் பெற்று வென்றிருப்பதைச் சான்றாக சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், திராவிடக் கட்சிகள் மீதான அபிமானத்தை மக்கள் முற்றிலுமாக துறந்துவிடவில்லை. அதிமுக தீர்ந்துபோன சக்தி என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை இந்தத் தேர்தல் உணர்த்துவதாகக் கூறுகின்றனர்.
அதேபோல், தவெக தன்னை அசுர பலத்தில் நிறுவியிருக்கும் சூழலில், இத்தனைக்குப் பிறகாவது எதிர்க்கட்சிகள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தியிருக்க வேண்டும் என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில், கடந்த தேர்தல் வரை பலமான கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து வந்த திமுக, இப்போது கிட்டத்திட்ட தனித்து தேர்தலை சந்தித்தது. அந்தக் கூட்டணியில் இப்போது தேமுதிகவும், சில சிறிய கட்சிகளும் மட்டுமே அங்கம் வகிக்கின்றன.
அதிமுக கூட்டணியிலும் பாஜக மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிமுக - பாஜகவோடு பல ஆண்டுகளாக நட்புறவோடு இருந்த ஜி.கே.வாசனும் இந்த தேர்தலில் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துவிட்டார். கட்சிகளின் எண்ணிக்கை கணக்கின் அடிப்படையில் இப்போதைய சூழலில், தவெக கூட்டணியே பலமானது.
நாதக வழக்கம்போல் இந்த இடைத்தேர்தலும் தன் இருப்பைக் காட்டும் அளவில் வாக்குகளை ஈர்த்த அதேவேளையில், இடதுசாரிகளோ சொல்லிக்கொள்ள முடியாத அளவில் வாக்கு எண்ணிக்கை கொண்டிருந்தது அரசியல் சோகம்.
இந்த இடைத்தேர்தலுக்கு முன்பு தவெகவின் மொத்த எண் பலம் 107. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸின் 5, விசிகவின் 2, ஐயூஎம்எல் கட்சியின் 2, இடதுசாரிகளின் 5 பலத்துடன்தான் தவெக ஆட்சி நடத்தி வருகிறது. இதில் தவெகவுக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்துதான் தருகின்றனர். இதனால் தவெகவை விமர்சிக்க சற்றும் தயங்குவதில்லை.
இந்தச் சூழலில், இந்த இடைத்தேர்தலில் தவெக தனது எம்எல்ஏக்கள் பலத்தை 109 ஆக உயர்த்திக் கொள்வது மிகப் பெரிய சாதகம். இன்னும் திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை என 5 தொகுதிகள் காலியாக உள்ளன. பாமகவும் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க ஆயத்தமாகிவிட்டது.
இதுவரை இலைக் கட்சி ஆட்களை மட்டுமே ஆள்வைத்து தூக்கி வந்த விசில் கிங்டம் விஐபி-க்கள், அடுத்ததாக சூரியக் கட்சி பக்கமும் இப்போது சூனிய வலை வீசுகிறார்களாம். சூரியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் மூத்த முன்னோடி குடும்பத்தின் மீது அந்தப் பார்வை திரும்பி இருப்பதாக உள்குத்து தகவல்கள் பரவி வருகின்றன.
ஆக, ஐந்து ஆண்டு ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மை பலம் என்ற மேஜிக் எண்களை தவெக தக்கவைப்பதற்கான நம்பிக்கையை வலுப்படுத்தினாலும் கூட, ஆளும் கட்சியாக இருந்தபோதும், இரு தொகுதிகளின் வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பது, ஆட்சியும் நிர்வாகமும் அதிருப்தி தந்தால், வசீகரத்தை வீசியெறிய வாக்காளர்கள் தயங்கமாட்டார்கள் என்பதே முதல்வர் விஜய்க்கு மக்கள் எடுத்த பாடம் என்றும் அரசியல் நோக்கர்கள் அழுத்தமாகச் சொல்கின்றனர்.
இந்த முடிவுகள் தவெகவுக்கு மட்டுமல்ல... அந்தக் கட்சியின் தலைவர் விஜய்யால் தீய சக்தி என விமர்சிக்கப்படும் திமுகவுக்கும், தீர்ந்த சக்தி என விமர்சிக்கப்படும் அதிமுகவுக்கும் தங்களை மீள்கட்டமைப்பு செய்ய மிகவும் முக்கியம் என்பதும் தெளிவாகிறது.