சென்னை அடுத்த கோவளத்தில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குப் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக முதல்வர் விஜய்.
சென்னை: ‘‘தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்ற தெளிவான சட்டப்பூர்வ உறுதி மொழியை வழங்க வேண்டும்’’ என்று தென் மாநில முதல்வர்களின் மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய் வலியுறுத்தினார்.
தென் மாநில முதல்வர்கள் அடங்கிய, தென் மண்டல குழுவின் 31-வது மாநாடு, சென்னை அருகே கோவளத்தில் உள்ள ஓட்டலில் நேற்று நடைபெற்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய், கேரள முதல்வர் வி.டி.சதீஷன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தெலங்கானா துணை முதல்வர் மல்லுபட்டி விக்ரமார்க்கா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன், அந்தமான்நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி, லட்சத்தீவுகளின் நிர்வாக அலுவலர் பிரபுல் படேல், தென்மண்டல குழு மாநிலங்களின் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளிநாடு சென்றுள்ளதால், மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை. தனக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாநாட்டைப் புறக்கணித்தார்.
மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய் பேசியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தென் மாநிலங்கள் 30 சதவீதத்துக்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன. தென் மாநிலங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம், ஒட்டுமொத்த இந்தியாவையும் ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை நோக்கி வேகமாக நடத்திச் செல்ல முடியும்.
சட்டவிரோத ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடுக்க மத்திய அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். போதைப்பொருள் கடத்தல், உற்பத்தி மற்றும் விநியோக நெட்வொர்க்குகளை உடைக்க மாநிலங்களுக்கு இடையே உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது ‘போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு’ மற்றும் ‘போதைப் பொருள் இல்லாத தென் இந்தியா’ உருவாக வழிவகுக்கும்.
தென் மாநிலங்கள் எல்லைகளைத் தாண்டி ஒரே பொருளாதாரப் பிராந்தியமாகச் சிந்திக்க வேண்டும். இதற்குச் சிறந்த உதாரணமாக, கர்நாடகாவின் பொம்மசந்திராவில் இருந்து தமிழகத்தின் ஓசூர் வரை பெங்களூரு மெட்ரோவை நீட்டிக்கும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
இதன் மூலம் பெங்களூருவின் எலெக்ட்ரானிக் சிட்டியையும், வேகமாக வளர்ந்து வரும் தொழில் மையமான ஓசூரையும் இணைத்து, நமது இரு மாநிலங்களின் தொழிலாளர்களையும் பொருளாதாரங்களையும் ஒன்றிணைக்கும் தென்னிந்தியாவின் முதல் மாநிலங்களுக்கு இடையேயான மெட்ரோ இணைப்புகளில் ஒன்றை உருவாக்க முடியும். மாநில எல்லைகளைக் கடந்து கூட்டு உள்கட்டமைப்பு என்ன சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு முன்மாதிரியாக இந்தத் திட்டத்தை நான் வரவேற்கிறேன்.
மேலும், 1,076 கி.மீ. நீளமுள்ள நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாடு, கடல்சார் பொருளாதாரத்தின் திறனை முழுமையாகப் பயன்படுத்தத் தயாராக உள்ளது. துறைமுகங்கள், உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து, மீன் வளம் மற்றும் கடற்கரை சுற்றுலா ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் தளவாடச் செலவைக் குறைத்து, உலகளாவிய முதலீடுகளை ஈர்க்க முடியும்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரங்களில், கீழ்மடை மாநிலங்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும், தீர்ப்பாயங்களின் உத்தரவுகளையும் அனைத்து மாநிலங்களும் மதிக்கவேண்டும். காவிரியிலும், முல்லைப்பெரியாறிலும் சட்டப்பூர்வ நடைமுறைகளின்படி நீர்மட்டம் மற்றும் நீர் பகிர்வு உறுதி செய்யப்பட வேண்டும்.
மாநிலத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்ப தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். மேலும், 2026-ம் ஆண்டுக்கான தொகுதி மறுவரையறை மசோதா பரிசீலிக்கப்படும் நிலையிலும், பெரும்பான்மையாக மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் நமது கூட்டுக் குரல் குறையக் கூடும் என்ற கவலை தென் மாநிலங்களிடையே உள்ளது.
தேசிய இலக்குகளை நிறைவேற்றும் மாநிலங்களைப் பொதுக் கொள்கை தற்செயலாகத் தண்டிப்பதாக இருக்கக்கூடாது. எனவே, மக்கள் தொகை நிலைப்படுத்தலில் அது அடைந்தவெற்றியின் காரணமாக நாடாளுமன்றத்தில் எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவ சதவீதமும் குறையாது என்ற தெளிவான சட்டப்பூர்வ உறுதிமொழியை மத்திய அரசு வழங்க வேண்டும்.
இத்தகைய அணுகுமுறை சமத்துவக் கொள்கைகளை நிலைநிறுத்தும். ஜனநாயகத்தில் அனைத்து மாநிலங்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தும். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார். கூட்டத்தில், முதல்வர் விஜய் அனைவரையும் வரவேற்றார். தமிழக தலைமைச் செயலர் மு.சாய்குமார் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.