தமிழகம்

அமித் ஷா தமிழகம் வரும்போது என்ன முடிவெடுக்கப் போகிறார் ஓபிஎஸ்?

ந.முருகவேல்

“வாய்ப்புகள் தேடி வந்தபோதெல்லாம் வாய் மூடி மவுனமாக இருந்தவர் அண்ணன் ஓபிஎஸ்” என அவரை நன்கறிந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். அவர் சொன்னது ஓரளவுக்கு உண்மைதான். அதனால் தான் வந்த வாய்ப்பு களை எல்லாம் விட்டுவிட்டு இப்போது எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் நிற்கிறார்.

சசிகலாவால் ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டப்பட்ட ஓபிஎஸ், இருவரும் எதிர்பார்த்ததைவிட பணிவாகவும் தலைமைக்கு விசுவாச மாகவும் இருந்தார். அதனால் தான், இரண்டு முறை அவரை முதல்வர் பதவியில் அமர்த்திவிட்டு நிம்மதியாய் இருந்தார் ஜெயலலிதா.

தலைமைக்கு விசுவாசமாக இருப்பதே தனது தலையாய கடமை என நினைத்த அவர், அதிகாரத்தில் இருந்த போதுகூட ’அம்மா’வுக்குப் பயந்து தனது விசுவாசிகளுக்குக் கூட பெரிதாக எதையும் செய்துகொடுத்ததில்லை என்பார்கள். இன்றைக்கு ஓபிஎஸ் தனிமரமாக நிற்பதற்கு அவரின் இந்த குணாதிசயமும் ஒரு காரணம். ஆனால், பழனிசாமியை பொறுத்தவரை இதற்கு நேர்மாறானவர். அதனால் தான் இன்றைக்கும் கட்சியும் அதிகாரமும் அவருக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜக சொன்னதைக் கேட்டு அம்மா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ். இப்படியெல்லாம் அவரை பலவாறாக ஆட்டுவித்த பாஜக, ஒரு கட்டத்தில் அவரை தங்கள் கட்சிக்குள் இழுத்துக் கொள்ளவும் பேசியது. அவருக்கு மாநிலத் தலைவர் பதவி தரப்படலாம் என்றுகூட பேச்சுகள் எழுந்து அடங்கின. ஏனோ அதை மறுத்துவிட்டார் ஓபிஎஸ். ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் கட்சிக்குள் தலைதூக்கிய போது, ‘கட்சி ஒற்றுமை’ என்ற பெயரில் கட்சிக்குள் தனக்கிருந்த பிடிப்பை கொஞ்சம் கொஞ்சமாக தவற விட்டார்.

‘அவரது செல்வாக்கை ஒரே ஒரு ஷேர் ஆட்டோவில் ஏற்றிவிடலாம்’ என்ற முடிவுக்கு வந்த பழனிசாமி, யோசிக்காமல் அவரை கட்சியை விட்டு நீக்கினார். முன்பு கொடுமைக்காரர்களாக தெரிந்த சசிகலாவும் தினகரனும் அதன் பிறகுதான் ஓபிஎஸ்ஸுக்கு குலகுருக்களாக தெரிந்தார்கள். அதிமுக-வை மீட்கப் போகிறேன் என்று சொல்லி ‘தொண்டர்கள் மீட்புக் குழு’வை தொடங்கிய ஓபிஎஸ், 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் அதிமுக-வையே எதிர்த்து நின்று ‘சாதனை’ படைத்தார். அங்கே அதிமுக-வை மூன்றாமி டத்துக்குத் தள்ளி சந்தோஷப்பட்டுக் கொண்டவர், “எந்த நிபந்தனையும் இன்றி அதிமுக-வில் இணையத் தயார்” என அப்ளிகேஷன் போட்டார்; பழனிசாமி பதிலே சொல்லவில்லை.

பழனிசாமியைத் சீண்டிப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டு மகன் சகிதம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதனால் அதிமுக-வினர் மத்தியில் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ‘கழகமாக’ மாற்றம் போவதாக புதுக் கலகத்தை ஆரம்பித்திருக்கிறார். அத்துடன், “டிசம்பர் 15-ம் தேதிக்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்” என்று பழனிசாமிக்கு மீண்டும் பாச்சா காட்டி இருக்கிறார்.

டிசம்பர் முதல் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போதாவது தங்களுக்கு ஏதாவது காரியம் நடக்குமா என்ற கணிப்பில் தான் ‘டிசம்பர் 15’ என்று கெடு வைத்திருக்கிறார் ஓபிஎஸ். டிசம்பர் 15-ல், திமுக கூட்டணியா தவெக கூட்டணியா என அவர் முடிவெடுக்கலாம் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT