2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவை அமைத்துள்ளது திமுக. இந்தச் சூழலில், 2021 தேர்தலுக்கு திமுக அளித்த வாக்குறுதிகளின் நிலை குறித்தும், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் கேள்விகள் குறித்தும் பார்ப்போம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க கனிமொழி தலைமையில் 11 கொண்ட குழுவை அமைத்துள்ளது திமுக. இக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு துறை சார்ந்தோரிடமும் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கையை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 தேர்தல் வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை திமுக அரசு நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், 2026 தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவை திமுக அமைத்துள்ளது.
2021 தேர்தலில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண்களுக்கு உரிமைத் தொகை, சிலிண்டருக்கு ரூ.100, மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், அரசுத் துறைகளில் காலியாக கிடக்கும் மூன்றரை லட்சம் பணியிடங்கள் மற்றும் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நிரப்பப்படும், விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு என்பன உள்ளிட்டவை பெரும் கவனம் பெற்றது.
ஆட்சிக்கு வந்தவுடனே இதில் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்தியது திமுக அரசு. மகளிர் உரிமைத் தொகை திட்டம் 2023 செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது. ஆனாலும், திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம்பெற்ற சிலிண்டருக்கு ரூ.100 மானியம், மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கீடு, நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படவில்லை.
மேலும், ஐந்தரை லட்சம் அரசுப் பணி வேலைவாய்ப்புகள் நிரப்பப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில், 1 லட்சம் வேலைவாய்ப்புகள் கூட நிரப்பப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. 2 லட்சம் விவசாயிகளுக்கு கூட இலவச மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை எனவும் விவசாய சங்கங்கள் புகார் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமின்றி பணி நிரந்தரம் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அரசு ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களுக்கான சங்கங்கள் போராட்டம் நடத்துகின்றன. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதிமுக, பாஜக, பாமக போன்ற கட்சிகள் தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. தவெக தலைவர் விஜய் கூட சமீபத்தில் இதுகுறித்து கேள்வியெழுப்பியிருந்தார்.
மேலும், நியாய விலைக் கடைகளில் கூடுதல் சர்க்கரை, உளுத்தம் பருப்பு வழங்கப்படும். ஆண்டுக்கு 100 நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பன உள்ளிட்ட எண்ணற்ற பல வாக்குறுதிகளும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்த வாக்குறுதிகளை மிச்ச காலத்தில் திமுக அரசு நிறைவேற்றுவது கேள்விக்குறிதான். தேர்தல் நேரத்தில் இதனை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்கும். எனவே, தேர்தல் நெருக்கத்தில் ‘டேமேஜ் கண்ட்ரோல்’ செய்யும் விதமாக சில வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றலாம்.
இந்தச் சூழலில்தான் 2026 தேர்தலுக்கான அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அமைத்துள்ளது. அந்த அறிக்கையில், இடம்பெறப்போகும் வாக்குறுதிகள் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2021 தேர்தலில் திமுக அளித்து நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகளை, இம்முறை அதிமுக தன் தேர்தல் அறிக்கையில் கையில் எடுக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், மக்களை கவரும் வகையில் சில இலவசப் பொருட்கள் வழங்கும் திட்டங்களையும் அதிமுக அறிவிக்கலாம்.
இதுமட்டுமின்றி மகளிர் உரிமைத் தொகை உயர்வு, விவசாயிகள், அரசு ஊழியர்களுக்கான அதிரடி அறிவிப்புகளுக்கும் அதிமுக - பாஜக தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் கொடுக்கும். அதேபோல பிஹார் பாணியில் பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 ஆயிரம் முன்தொகை போன்ற வாக்குறுதிகள் கூட அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம்.
எனவே, இதையெல்லாம் எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. மேலும், ஒவ்வொரு துறை சார்ந்தோரும் கடந்த தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்த கேள்விகளை திமுகவிடம் எழுப்புவார்கள். அதற்கும் திமுக தரப்பு பதில் சொல்ல வேண்டும்.
வலுவான கூட்டணி, மூன்றாகப் பிரியும் எதிர்ப்பு வாக்குகள் என 2026 தேர்தல் தங்களுக்கு ‘ஸ்மூத்’தானதாக இருக்கும் என திமுக நம்புகிறது. ஆனாலும், தேர்தலின் ‘கதாநாயகன்’ என வருணிக்கப்படும் தேர்தல் அறிக்கையை திமுக எப்படி அறிமுகம் செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.