சென்னை: தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக அரசின் உயர்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவை ஏற்று கடந்த ஆண்டு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் ஆலோசனை நடத்திய போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அதுதொடர்பான கருத்துருக்களை பெற்றனர், ஆனால், அதன்பிறகு தற்போது வரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
டீசல் விலை உயர்வு, வாகன பராமரிப்பு என பல்வேறு காரணங்களால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, தனியார் பேருந்துகளில் பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்தி, திருத்தப்பட்ட கட்டண அறிவிப்பை வெளியிட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக உயர்நிலைக் குழு ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளதாக அரசு தரப் பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சரின் ஆய்வுக்கு...
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக கடந்த செப்.17-ம் தேதி உயர் நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதில், தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கட்டண உயர்வு உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன, அதை போக்கு வரத்துத்துறை அமைச்சரின் ஆய்வுக்காக அனுப்பியுள் ளோம். அமைச்சரின் ஆய்வுக்குப் பிறகு முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, கட்டண உயர்வு தொடர்பாக உரிய முடிவு எடுக்கப்படும்.
இந்தப் பணியை முடிக்க 4 வாரம் அவகாசம் வேண்டும்’’ என்றார். அதையேற்ற நீதிபதி, இது தொடர்பாக உயர் நிலைக் குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அரசு தரப்பி்ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்.26-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.