தமிழகம்

கல்வராயன்மலையில் மலைவாழ் மக்கள் அல்லாதோருக்கும் வன உரிமைச் சான்று வழங்கப்பட்டதா?

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் மொத்த நிலப்பரப்பு 1,095 சதுர கி.மீ. இதில் 78,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் 45,508 ஹெக்டேர் வனத்துறைக்கு சொந்தமானதாக உள்ளது.

இதில், 197 ஹெக்டேர் வறண்ட நிலமாகவும், 1,103 ஹெக்டேர் வறண்ட பயன்பாடற்ற நிலமாகவும், 916 ஹெக்டேர் தேவையற்ற நிலமாகவும் உள்ளது. இதுபோக மீதமுள்ள நிலங்கள் மலைவாழ் மக்களின் வசிப்பிடங்களாகவும் அவர்கள் விவசாயம் செய்யும் நிலங்களாகவும் உள்ளது.

இந்நிலையில் கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரவங்காடு, மணியார்பாளையம், இன்னாடு, ஆரம்பூண்டி, வெள்ளிமலை, வண்டகப்பாடி, வன்னியூர், கெண்டிக்கல், தொரடிப்பட்டு, மேல்பாச்சேரி, குண்டியாநத்தம், கரியலூர், கிளாக்காடு, எழுத்தூர், கூடாரம், உப்பூர், வெள்ளேரிக்காடு, நாரணம்பட்டி, ஆலனூா், மேலாத்துக்குழி, சேராப்பட்டு, குறும்பலூா், கருவேலம்பாடி, மாவடிப்பட்டு, கள்ளிப்பாறை, வெங்காடு, மேல் நிலவூர், கீழ் நிலவூர், வஞ்சிக்குழி, வாழைக்குழி, சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மூலக்காடு, பாச்சேரி, புதுபாலப்பட்டு, கள்ளிப்பட்டு, சின்ன சேலம் வட்டத்தில் உள்ள பொட்டியம், மல்லியம்பாடி ஆகிய வருவாய் கிராமங்களில் கடந்த 2024 பிப்ரவரி மாதம் முகாம்கள் நடத்தப்பட்டு, மலைவாழ் மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.

இது தொடர்பாக ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் 3,071 நபர்களுக்கு கடந்த 2025-ம் ஆண்டு வன உரிமைச்சான்றுகளை வழங்கினர். மேலும் விண்ணப்பித்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவரை வன உரிமைச் சான்று வழங்கப்படவில்லை. இதனிடையே பல தலைமுறைகளாக மலைகளில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளிகள் பேரவை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு தொடர்பாக பேசிய தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளிகள் பேரவைத் தலைவர் கோவிந்தன், “அவர்களின் நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்கலாம் என 2024-ம் ஆண்டு நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாங்கள் பட்டா கேட்டு நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக அரசுவன உரிமைச் சான்று வழங்கி வருகிறது. இதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்திருக்கிறோம் என்றார்.

இதனிடையே மாவட்ட நிர்வாகம் வழங்கிய வன உரிமைச் சான்று பெற்றுள்ளவர்கள் மலைவாழ் மக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக மணியார்பாளையம், பொட்டியம் பகுதியில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஒரு நபருக்கு 4 ஏக்கர் அளவுக்கே வனஉரிமைச் சான்று வழங்க வேண்டும் என்ற உத்தரவை மீறி, சிலர் 20 ஏக்கர் வரை வன உரிமைச் சான்று பெற்றுள்ளதாகவும், இதற்கு மலை கிராமங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர்களும் உடந்தையாக செயல்படுவதாகவும் வன உரிமைச் சான்று கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும் பலர் மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலகத்துக்கு மனு கொடுத்துக் கொண்டிருந்தாலும், அவர்களது மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் அம்பேத்கரிடம் பேசினோம். “வன உரிமைச் சான்று வழங்கியதில் முறைகேடு புகார் எழுந்திருப்பது உண்மை தான். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தி, மலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் யாரேனும் பெற்றிருந்தால் அவற்றை ரத்து செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறோம்.

மேலும் வன உரிமைச் சான்று கோரி விண்ணப்பித்தவர்களின் மனுதொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். வனத்துறையின் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT