ஏழை, எளிய மக்கள் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு நீங்கி சமமாக வாழ்க்கை நடத்தவும், அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும் நலத் திட்டங்கள் அவசியமாக உள்ளது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
'இன்ஃபினிட் சேவா' அமைப்பின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் விழா ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி. 533 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பு நம் நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்ற முறையில் தான் வாழ்ந்து வந்தனர். சக மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்தனர். ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் தேவையான உதவிகளை செய்துகொண்டனர். இதன் மூலம், அடுத்தவர்களுக்கு சேவை செய்யும் மனப் பான்மை நமது மக்களிடம் இயல்பாகவே இருந்து வந்தது.
இத்தகைய சூழலில், ஆங்கிலேயர் ஆட்சியின்போது தான் நலத்திட்ட உதவி வழங்கும் முறையை கொண்டு வந்து, சமூகத்தில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தினர். அவர்கள் கொண்டு வந்த முறையை அரசியல் கட்சியினர் தொடர்கின்றனர்.
எனினும், தற்போதைய சூழலில் ஏழை, எளிய மக்கள் ஏற்றத் தாழ்வு நீங்கி சமமாக வாழ்க்கை நடத்துவதற்கு நலத்திட்டங்கள் அவசியமாக உள்ளது. அதனால் தான் மத்திய, மாநில அரசுகளும் நலத்திட்டங்களை செயல்படுத்து கின்றன . தனியார் அமைப்புகளும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது பாராட்டத்தக்கது. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இன்ஃபினிட் சேவா அமைப் பின் தலைவர் நளினி பத்ம நாபன், விவேகானந்தா கல்லூரி செயலர் சுவாமி தியானகம்யானந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.