கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (செப்.18) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மராத்வாடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை, உள் கர்நாடகா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.18) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், ஈரோடு, தருமபுரி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.19-ம் தேதி நீலகிரி, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.20, 21 தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.22, 23 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.18) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைப் பொழிவு: தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் துறையூர், விழுப்புரம் மாவட்டம் மயிலம், திண்டிவனத்தில் தலா 9 செ.மீ, சேலம் மாவட்டம் ஏற்காடு, ஓமலூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.