பிரதிநிதித்துவப் படம்

 
தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: கோவை, நீலகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை (ஆக.25) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆக.26 முதல் 28-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஆக.29, 30 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

வட தமிழகத்தின் உள் பகுதிகளில் ஆக.27, 28 தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன் ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை ( ஆக.25 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு- தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் உபாசி, ராணிப்பேட்டை மாவட்டம் மின்னலில் தலா 7 செ.மீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 செ.மீ, சென்னை அண்ணாநகர், பெரம்பூர், தண்டையார்பேட்டை, கொரட்டூர், பேசின் பாலம், காசிமேடு, வில்லிவாக்கம், கோவை மாவட்டம் சின்கோனா, சோலையார், விழுப்புரம் மாவட்டம் வளவனூர், கோலியனூரில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது” இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT