சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.11) முதல் ஆக.16-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஆக.11) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
ஆக.12, 13 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஆக.14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஆக.15, 16 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஆக.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தலில் 5 செ.மீ, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, மதுரை மாவட்டம் சோழவந்தானில் தலா 4 செ.மீ, விருதுநகர் மாவட்டம் சேதுபுரம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி, காரைக்குடி, அரியலூர், காரைக்கால், அரியலூர் மாவட்டம் திருமானூர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, பெரம்பலூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சென்னை பேசின் பாலம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.