கோப்புப் படம்

 
தமிழகம்

கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, மதுரை, வேலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை (செப்.19) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழகத்தின் உள் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மராத்வாடாவிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை, உள் கர்நாடகா மற்றும் கேரளா சுமார் 5.8 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.19) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (செப்.19) இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.20, 21 தேதிகளில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், டெல்டா மாவட்டங்கள், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைப் பொழிவு: தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 8 செ.மீ, நீலகிரி மாவட்டம் கோடநாடு, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, மால்வாய், தஞ்சை மாவட்டம் கல்லணை, அரியலூர் மாவட்டம் மேலக்கருப்பூரில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT