கோப்புப் படம்

 
தமிழகம்

சிவகங்கை, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு

நவ.13-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் நவ.13-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், நாளை (நவ.11) சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் நவ.13-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும்.

மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் 1.5 கி.மீ. உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (நவ.11) சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

வரும் 15-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT