கோப்புப் படம்
சென்னை: சேலம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செப்.30) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இது தவிர, தெற்கு தெலங்கானாவில் இருந்து மன்னார் வளைகுடா வரை, ராயலசீமா மற்றும் வடக்கு தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் காணப்படும் வளிமண்டல சுழற்சி வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (செப்.30) நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அக்.1-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஏனைய பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக்.3-ம் தேதி முதல் அக்.5-ம் தேதிவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை (செப்.30) ஆகிய இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை அதிகரிக்கும்:
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
மழைப் பொழிவு:
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.