சென்னை: தமிழக உள் மாவட்டங்களில் நாளை முதல் 27-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு விதர்பா முதல் குமரிக்கடல் வரை தெலங்கானா, உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை சுமார் 900 மீட்டர் உயரத்தில், நிலவுகிறது.
இதன் காரணமாக நாளை (ஏப்.25) முதல் ஏப்.27-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 28-ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 29, 30 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழக மாவட்டங்களில் நாளை முதல் 27-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 2 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.