படம்: ம.பிரபு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (ஜூலை 23), நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
26 முதல் 28-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நாளை முதல் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.