சென்னை: நாட்டை வளம் செழிக்க செய்யும் பருவமழையான தென் மேற்கு பருவமழை நாளை (ஜூன் 4) தொடங்க வாய்ப்பு உள்ளது. மேலும், நாளை தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு-வில் 9 செ.மீ., ஊத்துவில் 8 செ.மீ., காக்காச்சியில் 7 செ.மீ., மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் 6 செ.மீ., மாஞ்சோலை, ராசிபுரம், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் ஜூன் 4-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது. மேலும், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மேல் சுமார் 1.5 கிமீ உயரத்தில நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடக்கு தமிழகம் வரை மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலுங்கானா மற்றும் ராயலசீமா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன்காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜூன் 3-ம் தேதி முதல் ஜூன் 8-ம் தேதி வரை 6 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 3, 4 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 5, 6 ஆகிய தேதிகளில், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 7-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
ஜூன் 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
ஜூன் 7-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூன் 3, 4) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், கேரள-கர்நாடகா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஜூன் 7-ம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசும்.
எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி நாட்கள் வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.