கோப்புப் படம்: சாம்ராஜ்

தமிழகம்

கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனியில் இரு தினங்களுக்கு கனமழை வாய்ப்பு

மு.வேல்சங்கர்

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும், நாளை மறுநாளும் (மே 20, 21) இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்குவில் 10 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, நாளையும், நாளை மறுநாளும் (மே 20, 21) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை முதல் மே 23-ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.

மே 23-ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. எனினும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மே 23-ம் தேதி செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT