சென்னை: தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (மே 16) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 3 செ.மீ., தூத்துக்குடியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, வெள்ளிக்கிழமை காலை அதே பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 15) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 16-ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 17-ம் தேதி திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மே 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 15,16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மே 19-ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இதுபோல, அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மே 19-ம் தேதி பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
கேரளம் - கர்நாடகா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் மே 16-ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மேற்படி தேதிகளில், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.