தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 15 வரை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் தமிழகத்திலிருந்து கடலோர கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (மார்ச் 10) தமிழகக் கடலோர மாவட்டங்களிலும், 11-ம் தேதி தென் தமிழகத்திலும், 12-ம் தேதி தென் தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 13-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், 14, 15 தேதிகளில் தென் தமிழகக் கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

          

தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவிலும், 12 மற்றும் 13 தேதிகளில் வழக்கத்தை விட 3 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 77 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT