தமிழகம்

தமிழகத்தில் மார்ச் 5 வரை வறண்ட வானிலை - வெப்பநிலை உயர வாய்ப்பு

கா.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 5-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (மார்ச் 3) முதல் மார்ச் 5-ம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக் கூடும். குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

          

மேலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக 6-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், 7-ம் தேதி மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான முறையும் பெய்யக்கூடும். 8-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில லேசான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகத்தில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 4, 5 தேதிகளில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 6-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT