தமிழகம்

கோவை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (அக்.11) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு தமிழக கடலோர பகுதிகளின்மேல் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து உள் தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக வடக்கு மத்திய மகாராஷ்டிரா வரை சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.11) நீலகிரி, கோவை, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இதர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 12-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

13-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர பகுதிகளில் லேசான மழையும், 14-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,  இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸ் வரை இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் தனிச்சியத்தில் 8 செமீ, கன்னியாகுமரி மாவட்டம் பாலூர், ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் தலா 7 செமீ, நீலகிரி மாவட்டம் குன்னூர், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, சோழவந்தானில் தலா 6, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட், கிண்ணக்கொரையில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT