படம்: கிரி கேவிஎஸ்
சென்னை: தமிழகத்தில் ஆக.9-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான, ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென் கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
5-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
6-ம் தேதி தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
7-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 8, 9 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 10 செமீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் 7 செமீ, ஊத்தில் 6 செமீ, தேனி மாவட்டம் பெரியாறு, கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரத்தில் தலா 5 செமீ, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கன்னியாகுமரி மாவட்டம் பாலமோர், திருவள்ளூர் மாவட்டம் ஜெயா பொறியியல் கல்லூரி, கோவை மாவட்டம் உபாசி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தேனி மாவட்டம் தேக்கடி, கடலூர் மாவட்டம் மீ -மாத்தூர் ஆகிய இடங்களில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது.