படம்: வேளாங்கண்ணி ராஜ்

 
தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஜூலை 22 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் ஜூலை 22-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகப் பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (ஜூலை 19) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

20-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 21, 22 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 23, 24 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழத்தில் நாளை முதல் 22-ம் தேதி வரை கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை ஒட்டியும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாகவும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பள்ளிக்கரணையில் 5 செமீ, சென்னை விஐடியில் 4 செமீ, அண்ணா நகர், கொரட்டூரில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT