சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (மே 19) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி வி.ஆர். துரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, வட உள் கர்நாடகம் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதுதவிர, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனைச் ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, தென்கிழக்கு அரபிக் கடல் (தெற்கு லட்சத்தீவு பகுதியை ஒட்டிய) பகுதிலிருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மேல் உள்ள மேலடுக்கு சுழற்சி வரை, கேரளா, தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக, சுமார் 3.1 கிமீ முதல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை (மே 18) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் லேசான மழை பெய்யக்கூடும்.
மே 19-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மே 20-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 21-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மே 22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மே 23-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மே 24-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
மே 21, 22 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (மே 18,19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதி, தென் தமிழக கடலோரப்பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும். இதுதவிர, அந்தமான் கடல் பகுதி, தெற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதி, தெற்கு வங்கக்கடல்பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மே 22-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.