தமிழகம்

தமிழகத்தில் செப்.29 வரை எங்கெல்லாம் மழை வாய்ப்பு? | வானிலை முன்னறிவிப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.24) முதல் செப்.29-ம் தேதி வரை ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திர- தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளில், விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டின கரையை நெருங்கும்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதியிலிருந்து, தாய்லாந்து வளைகுடா வரை மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் வழியாக சுமார் 7.6 கி.மீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.24) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

25, 26 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

27-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 28, 29 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் குணமங்கலம் (கடலூர்), மேலப்பாலையூரில் தலா 3 செமீ, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தலா 2 செமீ, பெரம்பலூர் மாவட்ட் லப்பைக்குடிகாடு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், இலுப்பூர், கடலூர் மாவட்டம் பெலாந்துறை, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT