படம்; ம.பிரபு
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 15-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகக் கடலோரப் பகுதிகளில் சுமார் 0.9 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (ஜூலை 12) மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
13 முதல் 16-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 17-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 15-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கடலூர் மாவட்டம குப்பநத்தத்தில் தலா 7 செமீ, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடில் 6 செமீ, அரியலூர் மாவட்டம் செந்துறை, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, அவலூர்பேட்டை, கோவை மாவட்டம் உபாசி, சோலையார், கடலூர் மாவட்டம் விருதாச்சலம், நீலகிரி மாவட்டம் நடுவட்டம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.